தலைவரே அப்படி சொல்லிட்டு.. இப்போ இதுமாதிரி செய்யலாமா? காங்கிரசில் வெடித்த பிரளயம்! போச்சு
சென்னை: காங்கிரசின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சமீபத்தில் காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, குமரிஅனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 1 வாரத்திற்கு காங்கிரசில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. காங்கிரஸ் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்தார்.
ஆனால், இதை அறிவித்த 6-வது நாள் செல்வப் பெருந்தகைக்குப் பிறந்த நாள். அதைக் கொண்டாட அவரும் அவரது நட்பு வட்டாரமும் முடிவு செய்தன. அதன்படி, சென்னை தாஜ் நட்சத்திர ஹோட்டலில் மிக விமர்சியாக பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இந்த கொண்டாட்டத்தில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள், தொழில் பார்ட்னர்கள், வி.ஐ.பி.க்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த கொண்டாட்டம், தற்போது காங்கிரசுக்குள் சர்ச்சைகளை வெடிக்க வைத்துள்ளது. அதாவது, குமரிஅனந்தனுக்காக துக்கம் அனுஷ்டிப்பது முடிவடையாத நிலையில், அதைப் பற்றி கவலைப்படாத செல்வப்பெருந்தகை, அவர் போட்ட உத்தரவையே மதிக்காமல் அவரே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற சர்ச்சை காங்கிரஸ் வெடித்தபடி இருக்கிறது. கொண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்று செல்வப்பெருந்தகையின் எதிர்கோஷ்டிக்கு கிடைக்க, அதை கட்சியின் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
கூட்டணி
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமிக்க முடியவில்லை. கோஷ்டி தலைவர்களின் அரசியலால் இந்த பட்டியல் வெளியாகவில்லை. வெளியிடவிடவில்லை.
இதற்காக செல்வப்பெருந்தகை எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. இந்த சூழலில் தான் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக கிரிஷ் ஜோடங்க் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் சென்னை வந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் உட்பட கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் ஆலோசனை செய்தார்.
காங்கிரஸ் உட்கட்சி மோதல்
ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை, செல்லக்குமார், திருநாவுக்கரசு, பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோரும் தனித்தனியாக ஜோடங்கிடம் விவாதித்தனர். இதன் பிறகு டெல்லி சென்ற கிரிஸ் ஜோடங்க், கட்சியின் மேலிடத்திடம் பேசியிருக்கிறார். இதனையடுத்து, இன்று சென்னை வந்த ஜோடங்க், சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்துள்ளார்.
குறிப்பாக, நிர்வாகிகள் நியமனம் பற்றி விவாதித்துள்ளார். இதன் முடிவில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலிடத்தின் ஒப்புதலுடன் இந்த பட்டியலை வெளியிடவிருக்கிறார் ஜோடங்க். ஒரு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த பட்டியல், தற்போது ரிலீசாகவிருப்பதில் கதர்சட்டையினர் உற்சாகமாகியிருக்கிறார்கள். அதேசமயம், பட்டியல் ரிலீஸ் ஆகும் போது புதிய சர்ச்சை வெடிக்கும் என்றும் சொல்கின்றனர்
கூட்டணி
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்' என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள், என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை கடந்த மாதம் நியமித்தது கட்சியின் அகில இந்திய மேலிடம். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக கடந்த 3-ந்தேதி சென்னை வந்தார் கிரிஸ். அண்ணாசாலையில் உள்ள கன்னிமாரா ஹோட்டலில் அவருக்கு ரூம் போட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. கிரிஸ்சும் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்களாம். அதனால், கோவாவிலிருந்து சென்னைக்கு கிரிஸ் கிளம்பும் முன்பு, சிதம்பரத்திடம் பேசியிருக்கிறார்.
"சென்னைக்கு வாருங்கள் உங்களை சந்திக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார் ப.சி. ! அதன்படி அன்று இரவே கன்னிமாரா ஹோட்டலில் கிரிஸ், ப.சி. சந்திப்பு நடந்திருக்கிறது. சிதம்பரத்திடம் தமிழக அரசியல் சூழலையும், காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் சிந்தனைகளையும் சிதம்பரத்திடம் கேட்டறிந்துள்ளார் கிரிஸ். அப்போது, "திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையானது. இந்த கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரவேண்டும் என்று பேசியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications