ஓபிஎஸ் டீமில் அடுத்த விக்கெட்.. திமுகவில் ஐக்கியமான அதிமுக மாஜி! தட்டித் தூக்கிய மனோஜ் பாண்டியன்!
சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்து இருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். மனோஜ் பாண்டியன் மூலம் அவர் திமுகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த வேலைகளை திமுக துவக்கிவிட்டது என்றே சொல்லலாம். அதாவது 2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளிலேயே 2026 தேர்தலை ஒட்டி தேர்தல் குழுவை அமைத்தது திமுக.
கேஎன் நேரு தலைமையிலான இந்த குழுவில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். திமுகவுக்கு இந்த முறை வேலைகள் சற்று குறைவு என்றே சொல்லலாம். கடந்த தேர்தல்களைப் போல கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து பேச வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை.

திமுக திட்டம்
காரணம் ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை மட்டும் தான் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அதிமுக திமுகவை எதிர்க்க தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அதிமுக உட்கட்சி விவகாரங்களால் சிக்கித் தவிக்கும் நிலையில் அதிமுகவை மேலும் பலம் இழக்க செய்ய திமுக தயாராகி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் வேலைகளை தொடங்கிவிட்டது என சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்
ஏற்கனவே அன்வர்ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி இருக்கின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவுக்கு வந்தால் 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, கட்சியில் உரிய பதவி, தேவைப்பட்டால் அமைச்சரவையிலும் வாய்ப்பு தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
திமுக திட்டம்
ஏற்கனவே அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்ற சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது. அதாவது, அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்து இருக்கிறார்.
சுப்புரத்தினம்
திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞரான சுப்புரத்தினம் ஓபிஎஸ்-ன் மிக தீவிரமான ஆதரவாளர். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் விளக்கப்பட்ட போது அவர் கூடவே பயணித்தவர். ஓபிஎஸ்-ன் சட்ட போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் சுப்புரத்தினம். இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் அரசியல் முடிவுகளால் குழப்பத்தில் இருந்த அவர் திமுகவுக்கு தாவ தயாராகி வருவதாக சொல்லப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ .பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அங்கு முதல் ஆளாக வந்தவர் சுப்புரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக ஸ்டாலின்
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் சேர்ந்தார். அவர் மூலமாக அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்க திமுக திட்டமிட்டு வந்தது. தற்போது அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து இருக்கிறார் சுப்புரத்தினம். மேலும் மற்றொரு முன்னாள் எம்எல்ஏவான சிவகாசி பாலகங்காதரனும் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications