விராட் கோலி - பிசிசிஐ மோதல்.. அன்றே சொன்ன அனுஷ்கா சர்மா.. சேத்தன் சர்மாவால் வெளிவந்த உண்மை!
பிசிசிஐ - விராட் கோலி மோதல் பற்றி அனுஷ்கா சர்மா கருத்து பதிவிட்டுள்ளார்.
சென்னை: விராட் கோலி - பிசிசிஐ இடையிலான மோதல் குறித்து அனுஷ்கா சர்மா பதிவிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. களத்திற்கு வெளியே தான் அதிக சவால்களை விராட் கோலி சந்தித்ததாக அனுஷ்கா ஷர்மா பதிவிட்டதற்கு, இதுதான் காரணம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பிசிசிஐ அமைப்பால் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் அதே பொறுப்பில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் தனியார் தொலைக்காட்சி கடந்த வாரம் ரகசிய கேமராவை வைத்து ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் பிசிசிஐ அரசியல் குறித்து பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை சேத்தன் ஷர்மா உளறியுள்ளார்.

சேத்தன் சர்மா
இந்த வீடியோவில் சேத்தன் ஷர்மா கூறுகையில், பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி விராட் கோலியை இந்திய கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. கோலியின் ஈகோவின் காரணமாகவே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. தன்னை கேப்டன் பதவியில் இருந்து கங்குலிதான் நீக்கியதாக கோலி கருதினார்.

கங்குலி
கங்குலி தன்னுடைய கேப்டன் பதவியை பறித்ததாக வேண்டுமென்றே கோலி குற்றம்சாட்டினார். ஆனால், கங்குலி குறித்து விராட் கோலி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை. அதே நேரம் சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. கேப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருந்தன. ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. விராட் கோலிக்கு மட்டுமே எதிராக செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா
ஆனால் இதுகுறித்து விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியபோதே அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில், இந்திய டெஸ்ட் கேப்டனாக பல பயணங்கள் நிச்சயம் அதிகமான சவால் நிறைந்ததாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சந்தித்த சவால்கள் எப்போதும் களத்தில் இருந்ததில்லை. அதுதான் வாழ்க்கை இல்லையா? நாம் சாதாரணமாக எண்ணும் இடங்களில் நம்மை அதிகமாக சோதிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள்
தற்போது ஒட்டுமொத்த பிசிசிஐ அமைப்புக்கு எதிராகவும் விராட் கோலி ஒற்றை மனிதராக அணியை தலைமை தாங்கி முன்னேற்றியதோடு, ஜாம்பவான் வீரராகவும் வளர்ந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியை உலக நாடுகளில் வெற்றிபெற வைத்த கேப்டனை இப்படியா சிக்கல்களில் சிக்க வைப்பது என்றும் கங்குலியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனம்
அதுமட்டுமல்லாமல் விராட் கோலி ஃபார்மை இழந்ததற்கும், சில நாட்கள் ஓய்வில் இருந்ததற்கும் பிசிசிஐ அமைப்பே காரணம் என்றும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் இந்திய அணி நலனை கைவிடுத்து ஈகோ யுத்தம் நடத்தி வரும் பிசிசிஐ அமைப்பும், கங்குலியும் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications