சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்க போறீங்களா.. இந்த சான்றிதழ் கட்டாயம்.. இல்லாட்டி பெரும் சிக்கல்
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க ஆர்வம் காட்டுவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் தான் கட்டுகிறார்களா, சிஎம்டிஏ அனுமதி உள்ளதா, என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
இதேபோல் திட்ட அனுமதியின் படி பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதையும், குடியிருக்க போகும் அடுக்குமாடி கட்டடம் பாதுகாப்பானது என்பதற்கான தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யுங்கள்.. அப்படி இல்லாவிட்டால் பின்னாளில் பெரிய சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.

திட்டமிட்டதைவிட அதிகமாக வசதிகளும், கட்டிடங்களும் இலவசமாக கட்டிக்கொடுப்பதாக நிறுவனங்கள் சொன்னால் ஏமாறக்கூடாது என்று அடுக்குமாடியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி வசதிகளுக்கு ஆசைப்பட்டால் , கட்டிடத்தில் சமரசம் செய்து சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் அடுக்குமாடி வாங்கிய மக்கள் கூறுகிறார்கள்.
சென்னையில் மக்களால் இடம் வாங்கி வீடு கட்டுவது என்பதால் லட்சங்களில் சம்பளம் வாங்குவோருக்கு கூட சாத்தியமில்லாத தூரத்திற்கு சென்றுவிட்டது. சென்னை நகருக்குள் ஒரு கோடி இருந்தால் தான் இடம் வாங்கி வீடு கட்ட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. தாம்பரத்தில் தான் ஒரு கோடிக்கு தனி வீடு கட்ட முடியும் என்ற நிலை உள்ளது.
முறையான திட்ட அனுமதி, சரியான சாலை அமைப்பு, மழை நீர் தேங்காத இடம், தண்ணீர் வசதி உள்ள இடம், நல்ல வசதிகள் உள்ள இடம், அருகிலேயே ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை உள்ள இடத்தில் வீடு வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாயை கண்டிப்பாக எடுத்து வைக்க வேண்டியதிருக்கும்.
தற்போதைய நிலையில் ஐடி துறையில் பணியாற்றுவோர், அரசு வேலைகளில் உள்ளோர், தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளோர், தொழில் நிறுவனங்களை நடத்துவோர், பெரும் வியாபாரிகள் போன்றவர்களால் தான் உயர்ரக அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னையில் வாங்க முடிகிறது.
அதேநேரம் நடுத்தர மக்களை குறிவைத்து பட்ஜெட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இப்படி கட்டப்படும் குடியிருப்புகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், சிறப்பு வசதிகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கிறார்கள். எனினும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடம் போன்றவற்றை கண்டிப்பாக சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக சிஎம்டிஏ அனுமதித்த திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில் கட்டடம் கட்டப்பட வேண்டும். அப்படி கட்டிமுடிக்கப்படவில்லை என்றால் கண்டிப்பாக சிக்கல் வரும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சிஎம்டிஏ, சென்னை மற்றும் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள், கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள்,தனியார் வணிக நிறுவனங்கள் கட்ட அனுமதி தருகிறது. அதேநேரம் சிறப்பு வகைக் கட்டடங்கள், தொகுப்புக் கட்டடங்கள் மற்றும் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு தமிழக அரசின் ஒப்புதலுடன் சிஎம்டிஏ திட்ட அனுமதி வழங்குகிறது.
திட்ட அனுமதி அளித்தபடி வீடு அல்லது குடியிருப்புகள் கட்டாவிட்டாமல் கட்டுமான நிறுவனங்களில் தவறு செய்தால், வீடு வாங்குவோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ள அளவை காட்டிலும் கூடுதலாக அறைகள் இருந்தால் அவற்றை ஏற்கக்கூடாது. அதுகுறித்து கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும். இலவச இடம் மற்றும் சலுகைகளுக்கு மயங்கிவிடக்கூடாது.
கட்டடத்தின் திட்ட அனுமதி திட்ட வரைபடத்துக்கு அப்பால் இருந்தால் சான்றிதழ் கிடைக்காது. எனவே திட்ட அனுமதியின்படி கட்டிடம் கட்டியதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் கட்டடம் பாதுகாப்பானது என்பதற்காக, தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்றும் மிகவும் முக்கியம். இந்த சான்றிதழ் இல்லாத அடுக்குமாடி வீட்டை வாங்குவோர், பிற்காலத்தில், பிரச்னைகளில் சிக்கக்கூடும். மேலும் பெரும் இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழலும் இருக்கிறது. எனவே தகுதி சான்றிதழ் மற்றும் தீ தடுப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக உறுதி செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications