முதல்வராக பதவியேற்கும் முதல்நாளே ஜெயலலிதாவுக்கு மயக்கம், தலைசுற்றல்! அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்
சென்னை: ஜெயலலிதா தினமும் 16 மணி நேரம் வேலை செய்யவிருப்பதால் தன்னால் ஓய்வெடுக்க முடியாது என மறுத்துவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜரான அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையம் அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்களை விசாரணைக்கு அழைத்தது. இந்த நிலையில் மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை
இந்த நிலையில் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவர்
அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்கிறார். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது. இந்த ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர், ஜெயலலிதா மரணம் குறித்த வாக்குமூலம் அளித்தார்.

முதல்வராக பதவியேற்புக்கு முதல் நாள்
அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு முதல் நாள் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு மயக்கமும் தலைச்சுற்றலும் இருந்தது. இதையடுத்து மருத்துவர் சிவக்குமாரின் அழைப்பின் பேரில் நான் போயஸ் தோட்டத்திற்கு சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது அவரை ஊட்டிக்கோ அல்லது சிறுதாவூருக்கோ சென்று ஓய்வு எடுக்குமாறு நானும் என்னுடன் சென்ற மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்தனர். ஆனால் அவரோ தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதால் தன்னால் ஓய்வெடுக்க முடியாது என மறுத்தார்.

ஜெயலலிதாவால் நடக்க முடியவில்லை
இதனால் ஜெயலலிதாவுக்கு நான் சில மருந்து மாத்திரைகளை வழங்கி உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். துணையில்லாமல் நடக்க முடியாத சூழலும் ஜெயலலிதாவுக்கு இருந்தது என்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து செல்லும் போது மயக்க நிலையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications