ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்படும்.. அப்பாவு திட்டவட்டம்
சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகம் பெயர் மாற்றம், சனாதனம், திராவிடம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மசோதாக்கள் தமிழக அரசு தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
ஆனால் அவற்றை ஆளுநர் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்தார். அண்மையில் கூட கிடப்பில் போடப்பட்ட மசோதாக்கள் குறித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போடக் கூடாது என உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாக்களை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என தமிழக அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் 18 ஆம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை மறுநாள் சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும். மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் அதிகாரம். அதைவிட்டு விட்டு அவர் கிடப்பில் வைத்திருந்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications