Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் மீது அறப்போர் இயக்கம் பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறப்போர் கொடுத்த PACL புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதே சார் பதிவாளர் தான் பிஜேபியின் நயினார் பாலாஜி அவர்களுக்கு சென்னை நிலத்தை நெல்லையில் மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த சில வாரம் முன்பு அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு கிட்டத்தட்ட ரூ 100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பி உள்ளோம்.

Arappor iyakkam has made accusations against sub registrar who recorded the deed for Nainar Nagendran son

மதுரை என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முக்கிய இடங்களில் ஒன்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். சொக்கிகுளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தில் சுமார் 1.8ஏக்கர் நிலத்தை அபகரிக்க மோசடி பதிரபதிவுகளில் ஈடுபடுகின்றார் இளையராஜா என்னும் நபர்.

10 நபர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை தங்களுடைய நிலம் என்றும் இந்த நிலத்தை விற்கவும், விற்கும் பணத்தை பெற்று கொள்ளவும் பொது அதிகார பத்திரத்தை இளையராஜா மற்றும் அனிஷ் என்பவர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்கின்றனர். மதுரை சொக்கிகுளத்தில் உள்ள இந்த நிலத்திற்கு சம்பந்தமே இல்லாமல் திருநெல்வேலி முரப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில் 02/07/2021 அன்று பொது அதிகார பத்திர பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் அனந்தராமன்.

மேலும் அதே ஜூலை மாதம் இந்த கோவில் நிலத்தை குடும்ப செலவுக்காக இளையராஜா மற்றும் அனிஷ் சேர்ந்து அடகு வைப்பதாக பழனியில் உள்ள வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 19/07/2021 அன்று பதிவு செய்கிறார்கள். இந்த பத்திரப்பதிவை செய்யும் சார்பதிவாளர் அலுவலர் பெயர் பிரஷாந்த் சந்தான கருப்பன்.

இதில் இவர்கள் யாரிடம் அடகு வைக்கிறார்கள் என்று பார்த்தல் , இளையராஜா குடும்ப செலவுக்காக அவருடைய மனைவி கவிதாவிடமே 15 லட்சம் ரூபாய்க்கு அடகு வைப்பதாக பத்திரப்பதிவு செய்கிறார் மற்றும் அனிஷ் அவருடைய தந்தை பிரகாசிடமே அடகு வைப்பதாக பதிவு செய்கிறார்கள். அதாவது கோவில் நிலத்திற்கு அடுத்தடுத்து பல பத்திரப்பதிவு உருவாக்குவதற்காக இதை செய்கிறார்கள்.

இதெல்லாம் மோசடி பத்திரபதிவு என்று மாவட்ட தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு. IG பத்திரபதிவு 29/06/2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார்.

அதில் தெளிவாக ஏன் இந்த பத்திரப்பதிவு மோசடி பதிவு என்று குறிப்பிடுகிறார். நிலத்தை பதிவு செய்யும் முன்னர் முதலாவதாக இந்த நிலம் அரசு நிலமா, நீதிமன்ற தடை உள்ளதா அல்லது வக்ப் போர்டு நிலமா அல்லது கோவில் நிலமா என்று பார்க்க வேண்டும். ஆனால் அதை சரிபார்க்கபடவில்லை. இரண்டாவது பத்திரப்பதிவு சட்டத்தின் விதி 28 மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிடுகிறார்.இந்த விதிமீறலை வைத்து தான் பத்திரப்பதிவு துறையில் பல மோசடிகள் செய்யப்படுகிறது.

விதிபிரிவு28 இன் படி ஒரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட நிலத்தை வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஒருவருடைய நிலம் இரண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தால் அதனை ஏதேனும் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் இந்த இரண்டு நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய விதி. ஆனால் மேலே பதியப்பட்ட இரண்டு நிலங்களிலும் அப்பட்டமாக இந்த விதிமீறல் செய்யப்பட்டு உள்ளது இங்கு தெளிவாகிறது.

இவ்வாறு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிலத்தை மோசடியாக பதிவு செய்தபின் இளையராஜா மேலும் ஒரு மோசடி பத்திர பதிவை பெரிய அளவில் செய்ய களமிறங்குகிறார். சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள்.

Arappor iyakkam has made accusations against sub registrar who recorded the deed for Nainar Nagendran son

விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா city civil நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.

IG பத்திரபதிவு ஜூன் 2022 அன்று மேற்கண்ட சுற்றறிக்கையை வெளியிட்ட அடுத்த மாதமே, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.

வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தர மகாகிங்கம் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பதிரப்பதிவுகளில் அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் . மேலும் பிரிவு 28 ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில் பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் . ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் ஜூலை 2022 இல் பத்திரப்பதிவு செய்கிறார். சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நைனார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மோசடி பத்திரப்பதிவு மற்றும் பண பரிவர்த்தனைகள் கிரிமினல் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி பதிவு செய்த இளையராஜா, தானே தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜன்ட் என்றும் இந்த நிலம் குலாப்தாஸ் நாராயண் தாஸ் ஆகியவர்களின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஜூலை 2022 இல் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த முறைகேட்டில் அதிரடியாக களமிறங்கிய வருவாய் துறை நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தின் பட்டாவை சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இருந்து, 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலும், 1944ஆம் ஆண்டு சென்னையிலும் இறந்த குலாப்தாஸ்கு நாராயணதாஸ் அவரின் பெயருக்கு ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு பட்டா மாற்றம் செய்து அதிரடிகாட்டி உள்ளனர்.

இவ்வளவு பெரிய மோசடி பத்திர பதிவு உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மாவட்ட சார்பதிவாளர் தணிக்கையில் இந்த மோசடி பதிவு சிக்கியதா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. முக்கியமாக இதில் குலாப்தாஸ்கு நாராயணதாஸ் 1946 இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார், ஆனால் மற்றொரு புறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக வேறு ஒரு இறப்பு சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது.

நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் திருநெல்வேலி MLA பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக அறிகிறோம். எனவே MLA நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை இருந்தால், நமது எந்த நிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மோசடி பத்திரப்பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கம் அரசு தலைமை செயலர், பதிவு துறை அமைச்சர், பதிவுத்துறை செயலர், வருவாய் செயலர், சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது.

அரசு இது போன்ற நிலங்களின் உண்மை தன்மையை கண்டுபிடித்து வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இது போன்ற நிலங்களில் ஏழ்மையில் உள்ள வீடுகள் இல்லாத எண்ணற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கலாம்.

இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட முகாந்திரம் உள்ள இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் MLA நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறப்போர் கோரி உள்ளது. முக்கியமாக பள்ளிகரணை சதுப்பு நிலத்தை ராயபுரத்தில் பதிவு செய்த போதே அங்கயற்கண்ணி மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இளையராஜா போன்றவர்கள் அதே தவறை செய்ய துணிந்து இருக்க மாட்டார்கள். ஆனால் தப்பு செய்யும் நில அபகரிப்பு குழு மற்றும் அதிகாரிகள் தொடர் விதிமீறல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர்கள் இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி ஆவணங்களை ரத்து செய்யும்வரை, சட்டவிரோத பத்திரப்பதிவில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும்" என்று கூறியிருந்தது.

இந்நிலையில் அந்த நிலத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என நயினார் நாகேந்திரனின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணித் துணைத் தலைவருமான நயினார் பாலாஜி கூறியிருந்தார். இது குறித்துப் பேசிய நயினார் பாலாஜி, " குறிப்பிட்ட நிலம் நாராயணன் கிராமிணி என்பருக்குச் சொந்தமானது. அவர் குலாப்தாஸ் என்பவரிடம் கடன் பெற்றதற்காக 1931-ல் நீதிமன்றத்தின் மூலம் கிரையப் பத்திரம் செய்து கொடுத்திருந்தார். குலாப்தாஸின் பேரனான நாராயணன் ஓரா என்பவர் மும்பை நீதிமன்றத்தில் வாரிசுச் சான்று பெற்றுள்ளார். அதையெல்லாம் சரிபார்த்த பின்னர் இளையராஜா என்பவர் விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ளார். இதற்கிடையே அந்த நிலம் தொடர்பாக சிலர் போலியான பத்திரங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. விற்பனை உரிமம் வைத்திருக்கும் இளையராஜாவிடமிருந்து நாங்கள் அந்த நிலத்தை வாங்குவதற்காக, நிலத்தின் உண்மையான மதிப்பான ரூ.46 கோடியில் இரண்டரை கோடி ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்து பத்திரம் பதிவுசெய்துள்ளோம்.

அந்த நிலத்துக்காகப் பதிவுசெய்ததில் எந்தவித விதிமுறை மீறலும் கிடையாது. நாங்கள் நிலத்தை 2022, ஜூன் 1-ம் தேதி பதிவுசெய்துவிட்டோம். ஆனாலும் அந்த நிலத்துக்கான மதிப்பு, பட்டா உள்ளிட்டவற்றைச் சரிபார்த்த சென்னை சார்-பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பிறகே ராதாபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்திலிருந்து எங்களுடைய ஒப்பந்தப் பத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பத்திரப்பதிவு விதி 28-ன் கீழ் வேறு இடத்தில் பத்திரம் பதிவு செய்யக் கூடாது என்பதற்கான நடைமுறை ஜூன் 29-ம் தேதிதான் வந்தது. அதற்கு முன்பாகவே நாங்கள் பத்திரம் பதிவுசெய்து விட்டோம். எனவே இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. ஆனால், இந்த நிலத்துக்கு உரிமை கொண்டாடும் யாருக்கோ ஆதரவாக அல்லது நிலத்தை வாங்க முயன்ற யாரோ சிலருக்காக அறப்போர் இயக்கத்தினர் எங்கள்மீது பொய்யாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள்மீது அவதூறு பரப்பப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். என் தந்தை நயினார் நாகேந்திரன் மீது மக்களிடம் இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் செயல்படும் அறப்போர் இயக்கம் மீதும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் அவதூறு வழக்கு தொடருவோம்" என்றார்.

இந்நிலையில் அறப்போர் இயக்கம் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அறப்போர் கொடுத்த PACL புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதே சார் பதிவாளர் தான் பிஜேபியின் நயினார் பாலாஜி அவர்களுக்கு சென்னை நிலத்தை நெல்லையில் மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இன்னும் என்ன என்ன மோசடிகளை இவர் செய்துள்ளார் என்று விசாரித்தால் தான் தெரியும். ஆனால் சரவண மாரியப்பன் மீது FIR போட பரிந்துரைக்காமல் பத்திரப்பதிவு செயலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் விழித்துக் கொள்வாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+