"தாழ்த்தப்பட்ட" சாதி எது.. வெடித்த அடுத்த சர்ச்சை.. கடைசிவரை போராடினாரே பெரியார்.. தீர்வு என்ன?
பெரியார் பல்கலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில், சாதிய ரீதியான கேள்வியால் சர்ச்சையாகி இருக்கிறது.. 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
சேலம் மாவட்டம் கருப்பூரில் செயல்பட்டு வருகிறது பெரியார் பல்கலைக்கழகம்... 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன.

செமஸ்டர்
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வு நடந்துள்ளது.. இதில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.. இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்..

வினாத்தாள்
இது தொடர்பாக அவர் பேசும்போது, "வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை.. இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்... ஆனாலும், இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்பெறவில்லை.. தலைவர்களின் கண்டனங்கள் வெடித்துள்ளன.

அபத்தம்
மாணவர்களின் அறிவுத்திறனை அளவிட, இப்படித்தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டுமா? இதற்காக எத்தனையோ வழிமுறைகள் உள்ளபோது, சாதியை வைத்து கேள்வி எழுப்பப்படுவது அபத்தம் என்று எதிர்ப்புகள் பதிவாகி வருகின்றன.. இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள் என்றால், கேள்வித்தாளை தயாரிப்பவர்கள், எத்துணை சாதீய வன்மம் நிறைந்தவர்கள் என்றும் பொதுமக்கள் கொந்தளித்து கேட்டு வருகிறார்கள்..

நியமனங்கள்
அதைவிட முக்கியம், சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இப்படி நடந்திருப்பதுதான் உச்சக்கட்ட கொடுமை என்றும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.. சமீபகாலமாகவே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 27 துறைகளில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு, பதவி உயர்வு, பணி நியமனம் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வெடித்து வந்தன..
அதாவது, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பதவி உயர்வு மற்றும், பணி நியமனங்கள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

இறுதி மூச்சு
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசுக்கு பல புகார்களை அனுப்பியும் உள்ளனர்.. ஆனால், அது தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அடுத்த புகார் கிளம்பி உள்ளது.. அதிலும் சாதி ஒழிப்புக்காக தன் இறுதி மூச்சுவரை போராடிய பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றி கேட்ட கேள்வி, மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமம்ல, வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை என்று துணைவேந்தர் அளித்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்றும் கூறுகிறார்கள்..

சிபிஎஸ்இ
அப்படியானால், வினாத்தாள்களை தயாரிப்பவர்கள் யார்? எந்த அடிப்படையில் வினாத்தாள்களை தயாரிக்கிறார்கள்? அதை சரிப்பார்ப்பது எப்படி? இத்தனை காலம் இப்படிப்பட்ட புகார்கள் வராத நிலையில், சமீபகாலமாக மட்டுமே, பள்ளி, கல்லூரிகளில் சாதீய ரீதியான புகார்கள் வெடிக்க என்ன காரணம்? என்றும் சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழும்பி உள்ளன.. இதையடுத்து, பல்கலை.தேர்வில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வினாத்தாள் நீக்கப்படுமா என தெரியவில்லை என்றாலும், சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாளிலும், சாதி ரீதியான கேள்விகளே கேட்கப்படுவதும், நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

தமிழகம் - கண்டனம்
அதேபோல, சில தினங்களுக்கு முன்பு, மற்றொரு பகீர் அறிவிப்பு வெளியானது.. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்து அறிவிப்பு ஒன்று வெளியானது.. தமிழகத்தின் அரசியல் வளர்ச்சியில், பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளின் பங்கை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது.. அப்படி இருக்கும்போது, பல்கலையில், அரசியலையும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களின் அறிவை சிதைப்பது போல அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் கண்டனங்கள் பதிவாகின.. இப்போது இன்னொரு புகாரில் இதே பல்கலை.சிக்கி உள்ளது வேதனையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications