“சங்கியா மாறிட்டீங்க”.. பிராமணர் “சுப்ரீம் சாதி” பதிவால் விமர்சனம்! அதையும் பகிர்ந்த ஜேம்ஸ் வசந்தன்
பிராமணர்கள் குறித்த தன் பதிவுக்கு “நீங்களும் சங்கியாகவே மாறிவிட்டீர்கள்!” என்று வந்த கருத்து தன்னை மிகவும் கவர்ந்ததாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பிராமணர்கள் குறித்த தன்னுடைய பதிவுக்கு "நீங்களும் சங்கியாகவே மாறிவிட்டீர்கள்!" என்று வந்த கருத்து தன்னை மிகவும் கவர்ந்ததாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து இருக்கிறார். பிராமணர்கள் என்பதாலேயே அனைவரையும் ஒதுக்குவதும் தீண்டாமை என்றும், பிராமணர்கள்தான் உலகின் உயர்ந்த சாதி என்று பாஸ்கி பேசியதற்கு அவர் ஆதரவு தெரிவித்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு பிராமணர்களுக்கு ஆதரவாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
"ஒருவரை தீண்டத்தகாதவர் என்று சொல்வது தீண்டாமை என்றால், பிராமணர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பதும், விமர்சிப்பதும் கூட தீண்டாமைதான்." என்று ஜேம்ஸ் வசந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டு இருந்தார்.

பாஸ்கிக்கு ஆதரவு
இந்த நிலையில் நேற்று உலகிலேயே உயர்ந்த சாதியினர் பிராமணர்கள்தான் என்று நடிகர் பாஸ்கி பேசியதில் தனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்ததும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து பேஸ்புக்கில் அவர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்தார்.

ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்
அதில், "நான் சமீபத்தில் எழுதிய 'பிராமணர்' பற்றிய என் கருத்துகளுக்கு என்ன மாதிரியான எதிர்கருத்துகள் வரும் என்று தெரிந்துதான் எழுதினேன். அவை என் வாழ்க்கை அனுபவத்தில் என் உணர்வில் பதிந்தப் புரிதல்கள். அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை, வாய்ப்புமில்லை.

கற்பனைக்கு பொறுப்பில்லை
பொதுத்தளத்தில் இவ்வளவு அகன்ற, ஆழமான விஷயத்தை எல்லோரும் புரிந்துக்கொள்ளும், ஏற்கும் விதத்தில் ஒரே பகிர்வில் எழுதிவிட முடியாது. நான் பகிர்ந்தது ஒரு பரிமாணம். அது நேர்மறையானது. அதனால் எதிர்மறைப் பக்கங்களே இல்லையென நான் சொல்வதாக பலர் கற்பனை செய்துகொண்டதற்கு நான் பொறுப்பாக முடியாது.

வர்ணாசிரம அடிப்படை
வர்ணாசிரம அடிப்படையில் நம் மக்களை தரம்பிரித்து, அவர்களுக்கு எல்லா சமூக உரிமைகளையூம் மறுத்த உண்மைகளை ஏதோ நான் மறந்துவிட்டது போலப் பேசிக்கொண்டிருக்கிறீர் சிலர். அது பல நூற்றாண்டுக் கோபம் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. முன்னோர் செய்த பிழைகளுக்கு இன்று நம்மோடு உறவாடுகிறவனை எப்படி பகைக்க முடியும்?

இனத்தை பகைக்க வேண்டாம்
இனமாகப் பகைக்க வேண்டாம்; தனிமனிதனாக அவனை எடைபோடுங்கள் என்பதுதான் என் அறிவுரை. அவன் தவறானவனென்றால் கழுவேற்றுவோம், நல்லவனென்றால் நட்புடன் இருப்போம்! பழமை வாதம் பேசிக்கொண்டிருக்காமல், மறுக்கப்பட்ட என் மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவும், கல்வியின் அவசியத்தையும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், எதிர்கால இலக்குகளை நிர்ணயிக்கிற திறனையும், ஒருவன் முன்னேறுவதன் மூலம் அவன் சார்ந்த சமூகத்தையே முன்னேற்ற முடியும் என்பதையும் என்னளவில் நான் அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டு வருகிறேன். என்னோடு பயணிக்கிறவர் பலர்.

பணிப்பெண்களுக்கு தனி தட்டு
அது ஒருபுறம் இருக்கட்டும்! ரொம்ப நல்லவர் போல பலர் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். எத்தனை பேர் உங்கள் வீடுகளில் இன்று சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருக்கிற மக்களை உங்கள் வீட்டில் உங்களோடு உங்கள் உணவு மேசையில் அமர்ந்து உணவருந்த வைப்பீர்கள் - மனதுக்குள் எந்தக் கிலேசமும் இல்லாமல்? வீட்டுப் பணி செய்யும் பணிப்பெண்களுக்கென்று தனித்தட்டு, குவளை வைக்கிறவர்தானே உங்களில் பலர்?

இரட்டை குவளை முறை
தமிழ்நாட்டில் பல ஊர்களில், கடைகளில் இன்னும் இருவேறு தேநீர்க் குவளைகளைப் பயன்படுத்துகிறார்களே, கோயிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே, ஊருக்குள் வரக்கூடாது என்கிறார்களே.. இப்படி ஆணையிடுகிறவரெல்லாம் என்ன பிராமணரா?
இங்கு கருத்துப் பதிவிடும் பலர் சாதிவெறிக்குள் உழல்பவர்தானே? நீங்கள் எப்படி மற்றவரை விமர்சிக்க முடியும்?" என்று பதிவிட்டார்.

நீங்களும் சங்கிதான்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் மற்றொரு பதிவில், "என்னுடைய சமீபத்தியப் பகிர்வுகளுக்குப் பலவிதக் கருத்துகள். அதில் என்னைக் கவர்ந்தது - நீங்களும் சங்கியாகவே மாறிவிட்டீர்கள்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழும் ஜேம்ஸ் வசந்தனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications