ஆ கலர் மாறிடுச்சே.. தமிழ்நாட்டில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இத்தனை நாட்கள்.. வெயில் குறையாதா... கொஞ்சம் மழை பெய்யாதா.. வானிலை கரிசனை காட்டாதா என்று மக்கள் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த நிலையில்.. மழை தானே வேணும்.. இந்தா வச்சுக்கோ என்று மொத்தமாக இரண்டு நாட்களில் கனமழை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்து இருக்கிறது.

நேற்று தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என்று எல்லா ஏரியாவிலும் ஐயா கிங்குடா என்று சொல்லும் அளவிற்கு மழை கொட்டி தீர்த்து உள்ளது.
நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து உள்ளது.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது.
இது போக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது
அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாநிலங்களில் இந்த தமிழ்நாட்டில் உள்ள இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்தில்.. தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படி மேகங்கள் நகர்வது அரிதானது. இந்த கரு மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேலே வரும் முன் வலிமை இழக்க வேண்டும். ஆனால் இவை வலிமை இழக்காமல் தொடர்ந்து நகர்ந்து வருகின்றன.
அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் சென்னை ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியில் நீர்இருப்பு 2178 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 425 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 428 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு அதிகரித்த காரணத்தால் நீர் அனுப்புவது எளிதாகி உள்ளது. சோழவரம் ஏரியிலும் கணிசமான அளவு நீர் உயர்ந்து உள்ளது. கிரிஷ்ணாவில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அளவும் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் தினசரி குடிநீர் தேவைக்கு எளிதாக 159 கன அடி தண்ணீர் கொண்டு செல்ல முடிகிறது.












Click it and Unblock the Notifications