ஆல் ரவுண்டர் ராதாகிருஷ்ணன் மாற்றம் ஏன்? அந்த விஷயத்தில் சொதப்பிட்டாரு.. ஸ்டாலினுக்கே போன ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் நாளுக்கு நாள் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. தெருநாய்கள் கணக்கெடுப்பு மற்றும் எக்டோ மற்றும் எண்டோபராசைட்டுகளுக்கு எதிரான ஐவர்மெக்டின் தடுப்பூசி போடுதல், ரேபீஸ் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த பணிகள் ராயபுரம் கோட்டத்தில் (மண்டலம் 5) அப்போதைய கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) கமிஷனர் ஜே ராதாகிருஷ்ணனால் மூலம் தொடங்கப்பட்டது.

நாய்க்கடி விவகாரம்: சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்குவெறிநாய் தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கே மக்களை கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பிரேதப் பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபீஸ் வெறிநாய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல இடங்களில் குழந்தைகள் நாய்கள் மூலம் கடிக்கப்பட்டன.
ராட்வீலர்: கடந்த மே மாதம் கூட சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட 24 வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால் சென்னையில் இதை சரியாக கட்டுப்படுத்தவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சரியாக செயல்படவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. நாய்களின் உரிமையாளர்களிடம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்காமல், நாய்களை கண்ட்ரோலில் எடுக்காமல் ராதாகிருஷ்ணன் செயல்பட்டது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
அதோடு சென்னையில் குப்பைகளை கட்டுப்படுத்தாமல் போனது, ஆக்கிரமிப்புகளை பெரிதாக அகற்றாமல் போனது போன்ற விஷயங்களும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளது.
ஸ்டாலின் மாற்றம்: இந்த நிலையில்தான் நேற்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமரகுருபரன் ஐ ஏ எஸ் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகி உள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜவுளித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி கெஜலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருநெல்வேலி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் மெர்சி ரம்யா ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications