"டாப் 3".. சிதறுதா திமுக ஓட்டு.. அதிமுகவுக்கு லட்டு போல சான்சஸ்.. 2 பிரம்மாஸ்திரம்.. தினகரன் ரெடியா
சென்னை: திமுக + அதிமுக + தினகரன் என 3 கட்சிகளுக்கும் முக்கிய போட்டா போட்டி எழுந்துள்ளது.. இந்த போட்டிகள் "தெற்கில்" மையம் கொண்டுள்ளது.
மதுரை அரசியல் தலைவர்களின் சென்ட்டிமென்ட் களமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. இதே மதுரையில்தான் 1950-களில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தன்னுடைய முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கினார்.

அந்த கணமே அவருக்கு மதுரை மண்ணில் ஏகப்பட்ட செல்வாக்கு கூடிவிட்டது.. 1974-ல் "எனது கொள்கை அண்ணாயிஸம்" என்று எம்ஜிஆர் அறிவித்ததும் இங்குதான். மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் பெற்ற அமோக வாக்குகளே அதற்கு சாட்சி!
தீப்பொறி: 1982ம் ஆண்டு, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அதிமுக மகளிரணி மாநாடு நடந்து கொண்டிருந்தது... மாநாட்டில் ஜெ ஜெயலலிதா தன்னுடைய முதல் பொது உரையை நிகழ்த்தியதும் இங்குதான்.. பெண்களின் பெருமை மற்றும் அவர்களின் வாழ்க்கையை தொட்ட திட்டங்கள் குறித்த பேச்சு அது.. அதுவே அவரது அரசியல் தீப்பொறியின் முதல் பார்வையாக தங்கிவிட்டது..
விஜயகாந்த்: பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் "பாரதி கண்ட புதுமைப் பெண்" என்ற தலைப்பில் ஜெயலலிதா அந்த உரையை நிகழ்த்தியிருந்தார்.. அப்போது அவர் கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை. ஆனாலும், சில மாதங்களுக்குப் பிறகு, எம்ஜிஆர் அவரை கட்சியின் பிரசார செயலாளராக ஆக்கினார்.. அந்தவகையில், ஜெ.வின் அரசியல் துவக்க களம், மதுரையாகி போனது. இதற்கு பிறகு, விஜயகாந்த் முதல் இப்போதுள்ள தலைவர்கள்வரை மதுரையை சென்ட்டிமென்ட்டாகவும், இறுக்கமாகவும் பிடித்து வைத்து கொண்டுள்ளனர்.
இதே ரூட்டைதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார்.. இதுவரை ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரைகூட தன்பக்கம் கொண்டு வரமுடிவில்லை.. ஆர்பி உதயகுமாருக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கட்சியில் தந்தும்கூட, கடந்த ஒரு வருடமாகவே, முக்குலத்தோர் வாக்குகளை பெருவாரியாக பெற முடியவில்லை..
தினகரன்: இப்போது, மதுரையில் மாநாடு நடத்த போகிறார்.. எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தபோகிறார் என்றதுமே, ஓபிஎஸ் + தினகரனும் இதே மதுரையில் மாநாடு நடத்த பிளான் செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் சசிகலாவையும் மேடையேற்றும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. இதற்கு நடுவில், திமுக என்ட்ரி தருகிறது.
மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரை நீண்டகாலமாகவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி கொண்ட பகுதி. அதேசமயம் திமுக சரியான போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு வாக்கு வங்கியுடன் விளங்கி வருகிறது. இப்போது விரைவில் எம்பி தேர்தலும் வரப்போவதால், தென்மண்டல வாக்குகளை அள்ளுவதற்காக ஆளுக்கு ஒருபக்கம் களமிறங்கி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: ஆகஸ்ட் 20ம் தேதி மதுரை மாநாட்டினை எடப்பாடி நடத்துகிறார்.. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இப்படித்தான், ஜெயலலிதா எழுச்சி மாநாடுகளை திருச்சி, கோவை, மதுரையில் நடத்தினார்.. அந்தவகையில், கடந்த 2 வருட காலமாகவே சோர்ந்து போயுள்ள நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அடிப்படை பலத்தை பெருக்கி கொள்வதற்காகவும் இந்த மாநாட்டினை நடத்துகிறார்.. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு, நடக்க போகும் முதல் மாநாட்டு கூட்டம் இதுவாகும்.
தினகரன் + ஓபிஎஸ் + சசிகலா ஆகியோர் வெளியேற்றத்திற்கு பின்னர், தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டதாக ஒரு கருத்து எழுந்துள்ளதால், இந்த மாநாட்டினை கூட்டுகிறார் எடப்பாடி.
ராஜன் செல்லப்பா: ஆனால், ஓபிஎஸ் + தினகரன் + சசிகலாவின் முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பதற்காகவே கைகளை கோர்த்துள்ளதாக சொல்கிறார்கள்.. செல்லூர் கே.ராஜூ, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் போன்ற புள்ளிகள் இருந்தாலும்கூட, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு முழுமையாக நீங்கிவிடுமா என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவும் தேர்தல் கணக்கை ஆரம்பித்துள்ளது.. டெல்டாவில் இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா செல்வாக்கை மேலும் பெருக்கநினைக்கிறது.. இதற்காகவே, டெல்டா மாவட்டத்தை டிஆர்பி ராஜாவை தொழிற்துறை அமைச்சராக நியமித்திருக்கிறது திமுக மேலிடம் என்கிறார்கள்..
எடப்பாடி பழனிசாமிக்கு முக்குலத்தோர் மத்தியில் எதிர்ப்புகள் உள்ளதால்தான், அகமுடையார் சமூகத்தை சேர்ந்த டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டதாகவும் தெரிகிறது.
மூன்று முடிச்சு: ஆக, எடப்பாடி ஒருபக்கம், திமுக ஒருபக்கம், இதற்கு நடுவில் தினகரன், ஓபிஎஸ், சசிகலா என 3 தரப்பில் இருந்துமே, தென்மண்டல வாக்குகள் குறி வைக்கப்பட்டு வருகின்றன.. இதில் தெற்கை தட்டி தூக்க போவது யார்? என்பதே மிகுந்த எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.. அடுத்து என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications