"முருங்கை மரம்".. ஆட்டத்தை கலைத்தாடும் எடப்பாடி பழனிசாமி.. சுருக்னு சொன்ன அந்த வார்த்தை.. அரண்ட பாஜக
சென்னை: அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்பது வானிலை அப்டேட் போல ஆகிவிட்டது.. திடீரென இணக்கமாகிறார்கள், திடீரென சுணக்கமாகிவிடுகிறார்கள்.. என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணிக்குள்?
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இணக்கமான போக்கு ஏற்பட்டே ஆக வேண்டியிருக்கிறது.. இந்த இணக்கம் ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்..

அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம்.. இதுவரை அப்படியான நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.. உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணியாகவும் கருத முடியவில்லை.
வைத்திலிங்கம்: இதேபோன்ற அதிருப்தி அதிமுக தலைமைக்கும் உள்ளது.. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸூக்கு விடுக்கப்படாத நிலையில், தெம்பாக இருந்தது எடப்பாடி தரப்பு.. ஆனால், மறுநாளே ரவீந்திரநாத்துக்கு அழைப்பு சென்றதுமே கடுப்பாகிவிட்டதாம். ஆக, தேசிய அளவில் அதிமுக - பாஜக கூட்டணி உறதியாக இருக்கிறதே தவிர, மாநில அளவில் கூட்டணி வலுப்படவில்லை.. இன்னமும் அதிருப்திகள் இருக்கத்தான் செய்கிறது.
அமித்ஷா: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருந்தது.. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் நடைப்பயணம் ராமேஸ்வரத்தில் துவங்க உள்ளதால், இந்த நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அமித்ஷா தொடங்கி வைப்பதால், இந்த தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக பிளான் செய்தது.. அதன்படி, விழாவில் கலந்து கொள்ள 3 பேருக்குமே அழைப்பு விடுத்துள்ளதாம் பாஜகவின் தேசிய தலைமை. இந்த தகவல் சொல்லப்பட்டதுமே, "அவசியம் கலந்து கொள்ள வருவேன்" என்று உறுதியளித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
டிடிவி தினகரன்: ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனையும் பாஜக தலைமை அழைத்திருக்கிறது என்கிற விஷயம், அதற்கு பிறகுதான், எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. மாஜி அமைச்சர் ஜெயக்குமாரிடமும் இதை பற்றி புலம்பி தள்ளிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி..
"அமித்ஷா கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் அந்த ரெண்டுபேரும் (ஓபிஎஸ், தினகரன்) வருவார்கள். அவர்கள் முகத்தில் நாம் முழிக்கணுமா? டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்தபோது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அவர்களை சேர்க்கக்கூடாது" என்று ஸ்ட்ரிக்ட்டாக என்னுடைய முடிவை சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னையும் அழைத்து விட்டு அவர்களையும் அழைக்கிறார்கள் என்றால், டெல்லிக்கு என்னதான் நினைக்கிறது? அமித்ஷா தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு நான் போக மாட்டேன்" என்று நொந்து போய் சொன்னாராம்.
க்ரீன் சிக்னல்: நாம் இந்த செய்தியை வெளியிட்டதுபோலவே, இன்று நடந்துள்ளது.. இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பழனிசாமியை அழைத்தபோதும், நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டாராம் எடப்பாடி.
ஏற்கனவே, டெல்லி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகனை அழைத்த அதிருப்தியில் எடப்பாடி உள்ளார்.. இப்போது, நடைபயணத்துக்கும் ஓபிஎஸ், தினகரனுக்கு அழைப்பு போயுள்ளதால், மேலும் அப்செட்டாகி உள்ளாராம். இந்த காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அண்ணாமலையுடனான இணக்கமான போக்கும் இதுவரை ஏற்படாமலேயே உள்ளது.
பாஜக தலைமை: அண்ணாமலையை பொறுத்தவரை, பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், 3வது அணியாக எடப்பாடி தரப்பு களமிறங்க வேண்டும் என்ற புள்ளியை நோக்கி அரசியலை நகர்த்தி வருகிறார்.
இதற்கு நடுவில், திமுகவிற்கு எதிராக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் பாரபட்சமின்றி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்ததால் மோதல் மேலும் வலுப்பெற்றது.. போதாக்குறைக்கு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக அதிமுகவினர் எதிர்வினையாற்ற, 'கட்டுச்சோற்றில் கட்டிய பெருச்சாளி' என்னும் அளவிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் அண்ணாமலை விமர்சிக்கப்பட்டார்.
பெருச்சாளி: மேலும் ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் இந்தக் கட்சிகள் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இப்போது இந்த காரணத்தைதான், நடைபயண புறக்கணிப்புக்கு அதிமுக சொல்கிறது. காரணம், இது வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் நடந்த சம்பவங்கள். ஆனால், உள்ளுக்குள் நடக்கும் பாலிடிக்ஸே வேறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதற்கேற்றவாறு, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமும் இன்றுவரை தளரவில்லை.. அந்தவகையில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் பாஜகவின் இன்றைய தினம் நடைபயண முயற்சியும் சறுக்கலாகிவிட்டது. ஒருவேளை நாளை அமித்ஷா வரும்நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை தனியாக சென்று சந்தித்து பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.
ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இருவருமே, இனிமேல் இணக்கமாக செல்வோம் என்று 3 மாதங்களுக்கு முன்பு, அமித்ஷா முன்னிலையே உறுதி தந்திருந்தனர்.. இப்போது, இதே அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி பங்கேற்காதது, மேலிட பாஜகவை மீண்டும் கடுப்பாக்கி உள்ளது.. எப்படி பார்த்தாலும், பாஜகவுக்குதான் சிக்கல் கூடுகிறது..
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இனி பாஜக என்ன செய்ய போகிறது? திமுகவைவிட அதிக வாக்குவங்கியை வைத்துள்ள அதிமுகவின் ஓட்டுக்களை எப்படி சாதகமாக்கி கொள்ள போகிறது? எடப்பாடியை எப்படி சமாளிக்க போகிறது? தெரியவில்லை..
தினகரன் + ஓபிஎஸ்: அதேபோல, ஓபிஎஸ் + தினகரனை டெல்லி கூட்டத்துக்கு அழைக்காத நிலையில், நடைபயணத்துக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது சரியா? என்ற விவாதமும் வெடித்து கிளம்பி உள்ளது..
அப்படியே அண்ணாமலை அழைப்பு விடுத்தாலும், ஓபிஎஸ், தினகரன் இருவருமே தங்களை மதிக்காத பாஜக நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என்றே அரசியல் விமர்சகர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில், ஓபிஎஸ், தினகரனும் இதில் பங்கேற்பார்களா? என்று தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications