"உலை" வெச்ச எடப்பாடி.. இப்படி பண்ணிட்டாரே.. வாசனை வேற கழட்டி விட்டுட்டாரே.. கொதிக்கிறாரே கதர் லீடர்
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து கேஎஸ் அழகிரி கேள்விகளை கேட்டுள்ளார்
சென்னை: திமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை சொன்னால், அதை முந்திக்கொண்டு வந்து, கேஎஸ் அழகிரி வேறு ஒரு விஷயத்தை விமர்சித்துவிட்டு போயுள்ளார்.. இதற்கு என்ன காரணம்?
திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்ட கட்சிகளாகிவிட்டது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்றைய தினம், கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார்.

பதிலடி
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திமுகவும், கூட்டணி கட்சிகளையும் கடுமையாக சாடியிருந்தார்.. "திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சிகள் ஆகிவிட்டது. பல கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்களை அதிமுக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது" என்றார். இதையடுத்து, எடப்பாடியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேஎஸ் அழகிரி, உடனடியாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு பதிலடி தந்திருந்தார்..

பூசணிக்காய்
அதில், "திமுக தலைமை, காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கியதுபோல, இந்த இடைத் தேர்தலில் அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு தொகுதியை அதிமுக அபகரித்துக் கொண்டுள்ளது. இதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம். காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்..

அலசல்கள்
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை" என்று கூறியிருந்தார். அழகிரி விடுத்த இந்த அறிக்கையை வைத்துதான் அலசல்கள் நடந்து கொண்டிருக்கின்றன..

வாசன் கரிசனம்
கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பதாக திமுகவை பாராட்டினாலும், வாசன் மீது திடீரென அழகிரிக்கு என்ன அக்கறை? என்ன கரிசனம்? என்ற சந்தேகத்தை ஒருசாரார் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. வாசனுக்கு இந்த முறை தொகுதியை ஒதுக்கும்படி, பாஜக மேலிடம் சொல்லியும், எடப்பாடி பழனிசாமி அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றும், வாசனை எடப்பாடி டீம் கழட்டிவிடுகிறதா? என்றும் சில நாட்களுக்கு முன்பேயே செய்திகள் கசிந்தன.. இப்போது அழகிரியும் அதே கேள்வியைதான் எழுப்பி உள்ளார்... ஒருவேளை வாசனை தங்கள் பக்கம் இழுக்க அழகிரி முயற்சிக்கிறாரா? என்றும் யூகங்களை கிளப்புகிறார்கள்.

குட்புக் வாசன்
வாசனை பொறுத்தவரை, பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்.. குறிப்பாக, பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றவர்.. ஏற்கனவே 2 முறை எம்பி பதவி தருவதாக பாஜக மேலிடம் சொல்லியும், அதை அன்புடன் நிராகரித்தவர் வாசன்.. இந்த முறை 3வது முறையாக எம்பி பதவியை தரப்போவதாக மீண்டும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.. எனவே, வாசனும், தன்னுடைய நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பாஜகவுடன் தமாகாவை இணைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது..

மருது அழகுராஜ்
அந்தவகையில், பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் வாசன், வேறு எந்த கட்சிக்கும் செல்ல வாய்ப்பில்லை, வாசனை வைத்து எடப்பாடியை அழகிரி அறிக்கை விட்டு சீண்டி பார்த்துள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதேபோல இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே, காங்கிரசுடன் நெருக்கம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி, ராகுலுக்கு போனை போட்டு பேசியதாகவும் தகவல்கள் வெடித்தன.. அதுமட்டுமல்ல, நம் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஒரு பேட்டி தந்திருந்தார்..

மிதுன் சுனில்
அதில், "சுயநல வெறிபிடித்த மனநோயாளி எடப்பாடி.. முரண்பாடுகளின் மொத்த உருவம்.. அவரிடம் வீரம் இல்லை, ஈரம் இல்லை, தியாகம் இல்லை, அரவணைப்பு இல்லை, அறிவு இல்லை.. பொது அறிவும் இல்லை, பொதுவாகவே அறிவும் இல்லை, திராவிட இயக்கத்தின் கூமுட்டை தலைவன்.. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அரசியல் ஆலோசகர் சுனிலுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.. விரைவில் பாஜகவுக்கும் துரோகம் செய்துவிட்டு, காங்கிரசுடன் எடப்பாடி சேர போகிறார்" என்று கூறியிருந்தார். மேலும், எடப்பாடியுடன் காங்கிரஸ் நெருங்கி வருவதாக, எடப்பாடியின் ஐடி விங்கிலேயே செய்திகள் பரப்பி விடப்படுவதாக, இன்னொரு பரபரப்பும் கிளம்பியது. பல யூகங்கள் வெளிவந்த நிலையில், காங்கிரஸ் மட்டும் தெளிவாக இருந்தது..

தகர்ந்த கணக்கு
"பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி உள்ள எடப்பாடி, பாஜக கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியே வரமாட்டார், பாஜகவுடனேயே கூட்டணியை தொடருவார்" என்பதை காங்கிரஸ் உறுதியாக நம்பியிருந்தது.. ஒவ்வொருமுறை காங்கிரசுடன் நெருக்கம் இருப்பது போல எடப்பாடி தரப்பு காட்டிக் கொண்டாலும், அதற்கு உடனடியாக வந்து எதிர்வினையாற்றி கொண்டும், திமுகவுடனான தன்னுடைய கூட்டணியை உறுதி செய்து கொண்டுமிருந்தது சத்தியமூர்த்தி பவன்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "வரும் எம்பி தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்" என்பதை வெளிப்படையாகவே கூறி உறுதிப்படுத்தி உள்ளார்.. கேஎஸ் அழகிரி உடனடியாக அறிக்கை விட்டு பாய்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. ஆக மொத்தம் பாஜக + எடப்பாடி இரு தரப்பும் பின்னிப்பிணைந்தே உள்ளன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளதாகிவிட்டதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications