"டேஞ்சர்".. ஆட்டமே காலியாகிடும்.. எடப்பாடிக்கு போன எச்சரிக்கை மணி.. அடக்கி வாசித்த தலைகள்! என்னாச்சு?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளாராம்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு வரும் வரை இந்த தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தீர்ப்பு வரும் வரை கட்சியில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
அதோடு இது தொடர்பாக விளக்கம் கேட்டும் எடப்பாடி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போதைய நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில்தான் அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. விசாரணை விரைவில் முடிந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு
இந்த தீர்ப்பை பொறுத்தே எடப்பாடியின் எதிர்காலம் இருக்கிறது. ஏனென்றால் இந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும் என்று வந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். அதாவது அதிமுகவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று ஆகிவிடும். அப்படி நடந்தால் அதிமுகவில் மீண்டும் எல்லாம் எடப்பாடி - பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். இதுதான் எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கல்.

பகைக்க கூடாது
இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு வரும்வரை யாரையும் பகைத்துக்கொள்ள கூடாது. முக்கியமாக பாஜகவை டெல்லியில் பகைக்க கூடாது. பாஜகவை பகைத்தால் தீர்ப்பு எதிராக செல்லும் வாய்ப்பு கூட இருப்பதாக எடப்பாடி தரப்பு அஞ்சுகிறதாம். இதன் காரணமாகவே கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறாராம். முக்கியமாக கூட்டணி பற்றி பேச கூடாது என்று சொல்லி இருக்கிறாராம்.

கூட்டணி
சமீப நாட்களாக அதிமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த விவாதங்கள் எழ தொடங்கி உள்ளன. முக்கியமாக மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தன்னை தனியாக அழைக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கும், எனக்கும் ஒரே அளவு மரியாதை கொடுப்பது தவறு என்று எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம். இதன் காரணமாகவே எடப்பாடி காங்கிரசுடன் நெருக்கம் காட்டி வருவதாக பல்வேறு செய்திகள், விவாதங்கள் எழும்ப தொடங்கி உள்ளன.

பாஜக சிக்கல்
ஆனால் இதன் காரணமாக டெல்லி அப்செட் ஆகிவிட கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம் . இந்த விஷயங்கள் காரணமாக டெல்லி அப்செட் ஆகி, ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதர்வாக சென்றுவிட கூடாது., இதனால் கூட்டணி பற்றி வெளியே யாரும் பேசாதீர்கள். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி பற்றி கேட்டால் அதை பற்றி கருத்து சொல்லாதீர்கள். வழக்கில் தீர்ப்பு வரட்டும் . அதற்கு பின் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்பே கூட்டணி பற்றி பேசினால் நமக்குத்தான் ஆபத்து என்று நிர்வாகிகளுக்கு எடப்பாடி வாய்ப்பூட்டு போட்டு இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications
