அதிமுக பொது செயலாளராகும் திட்டம்? நொடியும் யோசிக்காமல் செங்கோட்டையன் கொடுத்த பதில்! பரபரப்பு
சென்னை: அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையன் இன்று கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட பல்வேறு புகார்களை முன்வைத்தார். அப்போது அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் நொடியும் தாமதிக்காமல் பதிலளித்தார்.
அதிமுகவில் மீண்டும் இப்போது உட்கட்சி குழப்பம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே இப்போது மோதல் போக்கு வெடித்துள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது சீனியர் தலைவர்கள் தலையிட்டே சமாதானம் செய்து வைத்தனர்.

இந்தச் சூழலில் தான் இருவருக்கும் இடையே இப்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகவும் தனது மனதில் உள்ளதை எல்லாம் வெளிப்படையாகப் பேசப்போவதாகவும் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பல முக்கிய கருத்துகளைக் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்திருப்பதாக செங்கோட்டையன் கூறினார். மேலும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனச் சொன்ன செங்கோட்டையன், இதற்காக 10 நாட்கள் கெடுவும் விதித்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதைக் கேட்ட செங்கோட்டையன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், "முதலில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இயக்கத்திற்காக நான் எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக இருக்க வேண்டும். ஜெயலலிதா சொன்னது போல நூறாண்டுகள் இந்த இயக்கம் ஆளும். அதற்காகத் தான் இந்தப் பணிகளை இன்று நான் தொடங்கியிருக்கிறேன்.
நான் இரண்டு விஷயங்களைத் தான் சொன்னேன். விரைந்து இந்த கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அப்படி நிறைவேற்றவில்லை என்றால் இந்த மனநிலையில் இருப்போரை ஒருங்கிணைத்து எல்லாரையும் மீண்டும் கட்சியில் இணைக்க அனைவரும் சேர்ந்து முயற்சிகளை எடுப்போம். அதுவே எங்கள் நோக்கம். இந்த விவகாரத்தில் உடனடியாகச் செயல்படவில்லை என்றால் எடப்பாடியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்" என்றார்.












Click it and Unblock the Notifications