நீங்க வெறும் சம்பிரதாய தலைவர்தான்.. விளையாடுறீங்களா? ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என ஆளுநர் ரவிக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசாரணையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும். ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்?.
ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும்.
ஆளுநர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே. தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். பதவிப் பிரமானம் செய்து வைக்க முடியாது என்று சொல்வது அவருடைய வேலை அல்ல

பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு இல்லையென்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை.
ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா?"
ஒரு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்றுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாத போது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது. எந்த களங்கமும் இதில் இல்லை, என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கு பின்னணி: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியநிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2006-11 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் தண்டனையை நிறுத்திட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications