இன்னும் 15 நாள்தான்.. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் அர்ஜுன மூர்த்தி தீவிர ஆலோசனை..!
மாவட்ட செயலாளர்களுடன் அர்ஜுன மூர்த்தி ஆலோசனை மேற்கொண்டார்
சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில், கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினிகாந்த் உறுதிபடுத்தி இருந்தார்.. அப்போதிருந்தே ரஜினி தொடர்பான செய்திகள் மீடியாவில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.

தினந்தோறும் ரஜினியின் கட்சி புது கட்சி தொடர்பான பல அறிவிப்புகளும் வந்தவண்ணம் உள்ளன.. அப்படி ரஜினி தரப்பில் இருந்து எந்த தகவலும், செய்தியும் கட்சி தொடர்பாக வரவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அது தொடர்பான வதந்திகள், பரபரப்புகள் என்று வட்டமடிப்பதும், அதை ரஜினி தரப்பு பின்னாடியே வந்து மறுப்பதும், விளக்குவதும் வழக்கமாகி வருகிறது.
எனினும், கட்சி தொடங்குவது தொடர்பான வேலைகளை ரஜினி மும்முரமாகவே பார்த்து வருகிறார். கடந்த வாரம்கூட போயஸ் கார்டன் வீட்டில், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக இந்த ஆலோசனை நடந்ததாக சொல்லப்பட்டது.. பிறகு, அதே நாளில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்திற்கு ரஜினி சென்று, அங்கும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. இந்த ஆலோசனை எதற்காக என்று தெரியவில்லை.. ஆனால், புதுகட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் ஆகிய 3 முக்கிய பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து ரஜினி அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதாக சலசலக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுன மூர்த்தி மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ஆகிய மூன்று பேரும் இன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனையை மேற்கொண்டனர்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்களும் வருகை தந்திருந்தனர்.. காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகி நடந்துள்ளது.
புதிதாக தொடங்க உள்ள கட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிட இன்னும் சில தினங்களே உள்ளதால், ரஜினி தரப்பு செம பிஸியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications