‛ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூரில் அடக்கம்’.. கட்சி அலுவலகத்தில் நினைவிடம்.. ஹைகோர்ட்டில் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அரசு அனுமதி பெற்று நினைவிடம் அமைத்து கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். இந்த கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார்.

armstrong bsp tamil nadu chennai politics

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்குகளில் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சூழ்ந்து சரமாரியாக வெட்டியது. அதன்பிறகு பைக்குகளிலேயே அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது.

இதில் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் சரிந்து விழுந்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவி்த்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவரது உடல் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தவைர் மாயாவதி உள்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநகராட்சியிடம் அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது.

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த மனுவுக்கு மாநகராட்சி தரப்பில் அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‛‛ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் புதைக்க மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் மாநகராட்சி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதானல் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடலை புதைக்க அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு அவசர வழக்கு அடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு விசாரிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் காணொலி காட்சி மூலம் இந்த மனு மீது விசாரணை நடத்துவாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தான் நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பவானி சுப்பராயன் விசாரிக்க வேண்டும் என்று கூறினர். இது ஏற்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் தலைமையில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் சங்கர சுப்பு வாதாடுகையில், ‛‛ஆம்ஸ்ட்ராங்கை உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அரசு தரப்பில் அரசு கூடுல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில், ‛‛பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடம் என்பது மிகவும் குறுகலானது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு 16 அடி சாலை தான் உள்ளது. இதனால் அங்கு இடநெரிசல் ஏற்படலாம். இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங்கின் வீடடில் இருந்து ஒன்றைரை கிலோமீட்டர் தொலைவில் இடம் தேர்வு செய்திருக்கிறோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம்'' என்று வாதிட்டார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி என்பதை விளக்கும் வகையிலான ஆதாரங்களை வரைப்படங்களாக அவர் நீதிபதி பவானி சுப்பராயனிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன் தனது கருத்தை தெரிவித்தார். இதுபற்றி அவர், ‛‛மயானம் என்று அறிவிக்கப்பட் பகுதியில் தான் உடலை அடக்கம் செய்ய முடியும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் கூட சட்டத்தை மீற முடியாது. பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன்.

மேலும் அரசு சார்பில் அடக்கம் செய்ய இடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியான பகுதி, சிறிய சாலை பகுதி என்பதால் எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?. எனவே பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு இன்னொரு இடத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். தற்போது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது. மனுதாரர்களிடம் கேட்டு கொள்ளுங்கள் உத்தரவு பறிப்பிக்கிறேன்'' எனக்கூறி வழக்கு விசாரணையை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

அதன்பிறகு கூடுதல் அவகாம் வழங்கி மதியம் 12 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், ‛‛நடிகர் விஜயகாந்த் மறைவின்போது அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியது. அதேபோல் எங்களுக்கும் அனுமதி தர வேண்டும்'' என்று கோரினர். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், ‛‛குறுகலான இடம், குடியிருப்பு பகுதி என்பதால் தான் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு சார்பில் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் தர தயாராக உள்ளோம்'' என வாதிட்டார்.

அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், ‛‛நாங்கள் அடக்கம் செய்ய தேர்வு செய்த இடம் 7,500 சதுரஅடியாகும். அது குறுகிய இடம் இல்லை. நான்கு புறமும் சாலை தான் உள்ளது'' என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இப்படி இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கு அறிவுரையாக சில கருத்துகளை தெரிவித்தார்.

இதுதொடர்பாக நீதிபதி பவானி சுப்பராயன், ‛‛அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர் இல்லை. இறந்த நபர் நல்லபடியாக, கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. இதனால் அரசு நிலத்தில் அடக்கம் செய்ய பாருங்கள். இதற்காக அனுமதி கோரி விண்ணப்பம் செய்யுங்கள்.

விஜயகாந்த் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் உங்களின் மனுவை நிராகரித்துள்ளது. இதனால் இறந்தவரின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். துயரத்தில் இருந்து அவரது மனைவி வெளிவர கொஞ்சம் காலம் அவகாசம் பிடிக்கும். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மன்பு அமர்ந்து அவர் மனைவி எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. அவர் மீண்டு வர வேண்டும். விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட சலுகையை போல் வழங்கப்பட வேண்டும் என்றாலும் அதுபற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் அரசு வழங்கும் இடத்தில் அடக்கம் செய்து வேறு இடத்தில் மணி மண்டபம் கட்டி கொள்ளலாம்.

சென்னையில் விசாலமாக அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளது. அதேபோல் விசாலமாக வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம். ராஜிவ் காந்தியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் உள்ளது. அப்படி மாற்று இடத்தில் மணிமண்டபம் கட்டி கொள்ளலாம். விசாலமான இடத்தில் மணிமண்டபம் கட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் அதிகமானவர்கள் கூடினாலும் பிரச்சனை வராது'' என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்வதற்கான மாற்று இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக முடிவு எடுக்க அவரது தரப்புக்கு 2.15 மணி வரை காலஅவகாசம் வழங்கி நீதிபதி பவானி சுப்பராயன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்'' என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.அப்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பில், அவரது உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன'' என்று கூறினார். இதைக்கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன் ஏற்றுக்கொண்டார்.

மேலும் நீதிபதி பவானி சுப்பராயன் ‛‛ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்யலாம். பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அரசு அனுமதியுடன் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம் அமைத்து கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் அடக்கும் செய்யக்கூடாது என்பது தான் பிச்சனை; நினைவு மண்டபம் கட்ட பிரச்சனையில்லை. அவரது பெயரில் நினைவு மண்டபம், மருத்துவமனை எது கட்ட வேண்டும் என்றாலும் அரசு அனுமதியுடன் கட்டி கொள்ளலாம்'' எனக்கூறினார்.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த இடம் என்பது ஆம்ஸ்ட்ராங்கின் உறவினருக்கு சொந்தமானதாகும். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் 2 இடங்களை தேர்வு செய்தனர். ஒன்று பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம், மற்றொன்று திருவள்ளூரில் உள்ள பொத்தூர். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கிடைக்காத நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+