ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்!
சென்னை: கடந்த ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5 ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக விசாரிக்கவில்லை, எனவே கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடட்ம விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டதாகவும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், தமிழ்நாடு காவல்துறை வசம் உள்ள விசாரணை ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரித்து 6 மாதங்களில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications