கலவரத்தை தூண்டவே நடைபயணம்.. அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்.. அடித்து ஆடும் ஆம் ஆத்மி! பரபர!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என்றும், மீறி நடைபயணம் மேற்கொண்டால் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில், சென்னையில் தமிழ்நாடு ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வசீகரன், "மணிப்பூரில் மிருகத்தனமான செயல் நடைபெற்றுள்ளது. ஆனால் பிரதமர் மோடி மனிதத்தன்மையோடு நடவடிக்கை எடுக்கவில்லை. மணிப்பூரில் பாஜக அரசின் செயலை உலகமே வன்மையாக கண்டித்துள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க சொன்னால், அங்கே நடக்கிறது இங்கே நடக்கிறது என வேறு சம்பவங்களை கை காட்டுகின்றனர்." என்றார்.
மேலும், "ஊழலைப் பற்றி பேச, கேள்வி எழுப்ப அண்ணாமலைக்கு தகுதியில்லை. எதற்கு இந்த நடை பயணம்? முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நடை பயணத்தை தடை செய்ய வேண்டும். நடைபயணம் சென்றால் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். அண்ணாமலை ஊழலை எதிர்த்து நடை பயணம் செல்லவில்லை, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. கலவரத்தை தூண்டுவதற்காக நடைபயணம் செல்கிறார் அண்ணாமலை.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது. வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர். இதனை கெடுப்பதற்காகவே அண்ணாமலை நடை பயணம் செல்கிறார். தமிழ்நாட்டின் அமைதியை கெடுப்பதற்காகவே நடைபயணம் செல்கிறார் அண்ணாமலை" எனக் குற்றம்சாட்டினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் அடுத்த ஜனவரி மாதம் வரை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபெயணம் மேற்கொள்ளவுள்ளார். ராமேஸ்வரத்தில் வரும் 28 ஆம் தேதி நடைபயணத்தை பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தொடங்கிவைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications