பெருமாள் பாதை சர்ச்சை.. நிர்மலா சீதாராமனுக்கு சூடு வைத்த அருள்மொழி
சென்னை: நிதியமைச்சர் சீதாராமன் பெருமாள் பாதை குறித்துப் பேசிய கருத்துகளுக்கு வழக்கறிஞர் அருள்மொழி பதிலளித்திருக்கிறார்.
கடந்த 26 ஆம் தேதி வெள்ளத்தில் மூழ்கிய தூத்துக்குடியைப் பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்திருந்தார். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

அங்கே உள்ள கள்ளபிரான் கோயிலைப் பார்வையிட்டார். அதன் பின் கோயில் புரோகிதர்களிடமும் பக்தர்களிடமும் குறைகளைக் கேட்டு அறிந்தார்.
அப்போது பெருமாளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த பாதை அசுத்தமாக உள்ளது என்று புரோகிதர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனே அப்பகுதியை ஏன் சுத்தமாக வைக்கவில்லை என்றும் புரோகிதர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்றும் அங்குள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்திருந்தார்.

கூடவே 'நான் கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள்' என்றும் கூறி இருந்தார்.
அவரது பேச்சு அப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. திமுக அனுதாபிகள் சிலர் அந்தப் பேச்சுக்குக் கருத்து கூறி இருந்தனர். இப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி சில விமர்சனங்களை வைத்துள்ளார்.

ஒரு நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், "சென்னை மாகாணத்தில் அலமேலுமங்கை தாயார் அம்மாள் என ஒருவர் இருந்தார். 30 பேர் சேர்ந்து ஆரம்பித்த நீதிக்கட்சியில் அவரும் ஒருவராக இருந்தவர். காந்தி மீது பற்றிக்கொண்ட அவர் திராவிட இயத்திற்கு வந்தார்.
அவரைப் பற்றி 1927இல் சுதேசமித்திரன் எழுதும் போது அலமேலுமங்கை தாயார் அம்மாள் பேசினாள் என்று எழுதியது. அதே செய்தியில் முத்துலட்சுமி ரெட்டியார் பேசினார் என்றும் லேடி சதாசிவ ஐயர் பேசினார் என்றும் எழுதியது.

அதைக் கண்டித்துப் பார்ப்பனர் அல்லாத மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் சுதேசமித்திரன் இதுவரை என்ன செய்துள்ளது? எனக் கேள்வி எழுப்பியவர் அலுமேலு மங்கை" என்று அந்தக் கால வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அருள்மொழி பல விசயங்களை முன்வைத்த பின் நிதியமைச்சர் விசயத்திற்கு வந்தார்.
"பிரச்சாரத்தில் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். பேசி வளர்ந்த இயக்கம். எழுதி வளர்ந்த இயக்கம். நாடகம் போட்டு நடித்து வளர்ந்த இயக்கம். போராட்டம் நடத்தியது என எல்லாமே நமக்குப் பிரச்சாரம்தான். ஆனால், இப்போது அந்த பிரச்சாரத்திற்கு ஒரு திகைப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், நமக்கு எதிராக நிற்பது பொய் பிரச்சார இயக்கம். கொள்கை பிரச்சார இயக்கத்தைக் கொள்கை பேசி எதிர்த்துவிடலாம். அப்படி வெல்வது இயற்கை. அது மிக எளிது.
பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டு சிலர் இயங்கி வருகிறார்கள். நாம் பேசுவதில் ஒரு ஒற்றுப் பிழை இருந்தால் அதைக்காட்டி, 'பாருங்கள் தப்பாகப் பேசிவிட்டார்' என்று சொல்லி அதைப் பெரியதாக்கும் ஒரு போக்கு அதிகரித்துள்ளது.

இன்று பரப்ப வேண்டிய 10 பொய்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துப் பரப்புகிறார்கள். காலை எழுந்தவுடன் 5 பொய்யை வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பிவிடுகிறார்கள். அப்புறம் மாலை 5.
அந்தப் பொய் செய்திகளைப் படித்துவிட்டு, நம்ம ஆட்களே 'தோழர் நீங்கள் இப்படிப் பேசி இருக்கக் கூடாது. உங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை' என்று கேட்கிறார்கள். மக்களுக்காக, நியாயத்திற்காக, மனிதநேயத்திற்காகப் போராட வேண்டிய நாம் இந்தப் பொய் பிரச்சாரங்களை எதிர்த்துப் போராட வேண்டி உள்ளது.
குண்டு வீசுபவர்களை எல்லாம் நாடாளுமன்றத்திற்குள் விட்டுவிட்டு, கேள்வி கேட்பவர்களை எல்லாம் வெளியே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு நாடாளுமன்றத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? ராம ராஜ்ஜியம். அப்படித் தான் இருக்கும்.

ஊரில் உள்ள மக்களே தண்ணீரில் மிதக்கிறார்கள். தூத்துக்குடியே தண்ணீரில் மிதக்கிறது. பெருமாள் போகின்ற பாதை பற்றி ஒருவர் கவலைப்படுகிறார். அவர் என்ன அந்த வழியே வைகுண்டத்திற்குப் போய்விடுவாரா? பெருமாள் போகின்ற பாதையைப் பற்றிப் பார்ப்பதுதான் உங்கள் வேலையா?
ஊர்ப் பெயரை மாற்றுவது, சட்டத்துப் பெயரை மாற்றுவது இதான் அவர்களின் வேலை. கடைசி வரை மக்களுக்குச் சோறுபோடுவது அவர்களின் வேலை இல்லை. நிம்மதியாக மக்களை வாழவிடுவதில்லை. கடவுளை வைத்துப் பிரித்தாளுவதே இவர்களின் கொள்கையாக இருக்கிறது" என்றார்












Click it and Unblock the Notifications