எல்லாம் விஜயபாஸ்கர் சொல்லிதான் தெரியும்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் ஒரே போடு
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம் பல கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்றே பதிலளித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவிற்கு இதயபாதிப்பு ஏற்பட்ட போது என்னமாதிரியான சிகிச்சை தரப்பட்டது யார் சிகிச்சை அளித்தார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அவர் மரணத்திற்கு முன்பு இதயபாதிப்பு ஏற்பட்டது பற்றி அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் தெரியும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. மருத்துவமனையில் அவரை யாருமே பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே கவனித்துக்கொண்டனர்.
அப்போது அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என யாருமே ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார், நர்ஸ், டாக்டர்களிடம் ஜெயலலிதா பேசினார் என பலரும் டிவிகளில் பேட்டி அளித்தனர். இறுதியில் இதய முடக்கம் ஏற்பட்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதா உயிரிழந்தார்.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் இரவோடு இரவாக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். சில நாட்களில் சசிகலாவின் கட்டாயத்தால் பதவி விலக நேரிட்டது. சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக
கூறி பிரச்சினையைக் கிளப்பினார். கட்சி உடைந்தது. ஓபிஎஸ் தலைமையில் சில எம்எல்ஏக்கள் பிரிந்தனர்.

ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போகவே கூவத்தூரில் கூடி எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்வு செய்தனர். சிறைக்கு போகும் முன்பு அனைத்து அதிகாரங்களையும் டிடிவி தினகரனிடம் கொடுத்து விட்டு போனார் சசிகலா. சில மாதங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைந்தனர். டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தனர்.

ஓபிஎஸ் இன்று ஆஜர்
கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 முறை ஆணையம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பல மணி நேர விசாரணை
காலை 11மணிக்கு சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜரானார் ஓ.பன்னீர் செல்வம், பல கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்ற ஒரே பதிலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா காவிரி ஆணையக்கூட்டம் நடத்தியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். தலைமைச்செயலரின் அறிக்கையை படித்து மட்டுமே தான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

விஜயபாஸ்கர் சொன்னார்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தனது உதவியாளர் மூலம் மட்டுமே தனக்கு தெரியவந்தது என்று கூறிய அவர்,சிகிச்சை முறைகள் பற்றி அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் தனக்கு தெரியவந்தது என்றும் கூறினார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயலலிதாவிற்கு இதயபாதிப்பு ஏற்பட்டது பற்றி விஜயபாஸ்கர் கூறியதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

பல கேள்விகளுக்கு ஒரே பதில்
ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் எழுப்பிய பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் கூறியுள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காகவே ஆணையம் நிறுவப்பட்டதாகவும் கூறினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்திடம் மீண்டும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கேள்விகளை ஓ.பன்னீர் செல்வத்திடம் எழுப்பினாலும் ஒரே பதிலை கூறி வருவதால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் எப்போது யாரால் விலகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications