ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் போட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தனது 8 வங்கி கணக்குகளை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நடிகர் ஆர் கே சுரேஷின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி ஆர் கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,400 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த மோசடி வழக்கின் விசாரணையின் போது, பாஜக நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே சுரேசுக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆர் கே சுரேஷின் 8 வங்கி கணக்குகளை முடக்கம் செய்து பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வங்கி கணக்குகளை முடக்கம் செய்த நடவடிக்கையை எதிர்த்து நிதி நிறுவன வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர் கே சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 8 லட்சம் ரூபாய் டெப்பாசி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி ஆர் கே சுரேஷ் தரப்பில் இருந்து ரூ.8 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டது. இருப்பினும் வங்கி கணக்கு நீக்க நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக ஆர்கே சுரேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனு நிதி நிறுவன வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், இந்த வங்கி கணக்குகள் மீதான முடக்கமானது மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் வேண்டும் என்றே கால தாமதம் செய்துள்ளது என்று அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான காலக்கெடுவுக்குள் வங்கி கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, இது நீதிமன்ற அவமதிப்பாக வராது என்று உத்தரவிட்டு ஆர் கே சுரேஷ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications