தினகரன் அணியில் இருந்து எஸ்கேப்- எடப்பாடியை சந்தித்து அதிமுக கூட்டணியில்"அடைக்கல"மாகும் ஓவைசி கட்சி?
சென்னை: டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தற்போது அதிமுக கூட்டணிக்கு "இடம் பெயர்ந்து" கொண்டிருக்கிறது. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஓவைசி கட்சி தமிழ்நாடு தலைவர் வக்கீல் அஹமத் சந்தித்து பேசினார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது மஜ்லிஸ் கட்சி. இதன் தலைவர் ஓவைசி. தெலுங்கானா மாநில அரசியல் கட்சியாக அறியப்பட்ட ஓவைசி கட்சி, கர்நாடகா, மகாராஷ்டிரா என ஒவ்வொரு மாநிலமாக கால் பதித்தது. பீகார் தேர்தலில் 5 இடங்களில் வென்றது பெரும் பரபரப்பையும் அதிர்வையும் உருவாக்கியது. அந்த 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடியில் இணைந்துவிட்டது தனிக் கதை.

தமிழக தேர்தல் களத்தில் ஓவைசி கட்சி: இதனால் ஓவைசி கட்சி குறித்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலிலும் ஓவைசி கட்சி போட்டியிடும் என அறிவித்தது. ஓவைசி கட்சி திமுக கூட்டணியில் இணையக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டது ஓவைசி கட்சி.
தாக்கம் ஏற்படுத்தாத ஓவைசி கட்சி: இருப்பினும் தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றும் ஆதரித்தும் வந்தன. பாஜகவுக்கு எதிரான பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே கிடைத்தன. இதனால் ஓவைசி கட்சி, எந்த ஒரு தாக்கத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை.
பாஜக கூட்டணியை முறித்த அதிமுக: இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இந்த கூட்டணி முறிவை உறுதி செய்த கையோடு, இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தையும் தொடங்கி இருந்தார். திமுக கூட்டணியை ஆதரித்த தமிமுன் அன்சாரி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர். அப்போது ஓவைசி கட்சியும் வாழ்த்து தெரிவித்தது.

எடப்பாடியுடன் ஓவைசி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு: இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் வக்கீல் அஹமத் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க.கூட்டணியில் இருந்து விலகியதற்காக வாழ்த்துக்களும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது என ஓவைசி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மஜ்லிஸ் கட்சியின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தலைமையிலான புதிய கூட்டணியில் ஓவைசி கட்சியும் இடம் பெறக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications