8 ஆயிரம் ரூபாய் செலவு.. ஸ்டில்ஸ் எடுக்க காசு இல்லாமல் தவித்த விஜயகாந்த்!
சென்னை: விஜயகாந்த்தை முதன்முதலாக ஸ்டில்ஸ் எடுத்த புகைப்படக் கலைஞர் ஆசைத்தம்பி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
விஜயகாந்த் மறைவை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு அலைந்த காலங்களில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் புகைப் படங்கள் வைரலாக மாறி இருக்கின்றன.

அந்தப் படங்களை எடுத்தவர் மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆசைத்தம்பி. அவரது ராசி ஸ்டுடியோவில் வைத்துத்தான் அந்தப் படங்களை அந்தக் காலத்தில் எடுத்துள்ளனர்.
ஆக்ஷன் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும்? அப்போது முகபாவனைகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படங்கள் அவை என்கிறார் ஆசைத்தம்பி. மேலும் அங்கே கிடந்த ஒரு நாற்காலியை எடுத்து அதில் அவசரத்திற்கு அமரவைத்து எடுக்கப்பட்ட தற்செயலான படங்கள் அவை என்றும் கூறுகிறார்.

இவருக்கும் ஆசைத்தம்பிக்குமான நட்பு 'இனிக்கும் இளமை' தொடங்கி 'தூரத்து இடி முழக்கம்' வரை இருந்திருக்கிறது. விஜயகாந்த்தின் நினைவையும் நட்பையும் எடுத்துக்காட்டும் விதமாக ஆசைத்தம்பி இப்போது அவரது ஸ்டுடியோவில் விஜயகாந்த்தின் அட்டைப்படத்தைத் தாங்கிவந்த 'பொம்மை' இதழை ஒட்டி வைத்துள்ளார். அதில் பிறந்த மண்ணில் விஜயகாந்த் கட்டுரை இடம்பிடித்துள்ளது.

தூரத்து இடி முழக்கம் ரிலீஸ் போது அவர் கரிமேடு பக்கத்தில் வசிக்கும் ரசிகர்களைப் பார்க்க விஜயகாந்த் சென்றுள்ளார்.
"அந்தப் படம் ரிலீஸ் ஆன போது பலரும் சேர்ந்து அவருக்கு மன்றம் ஆரம்பித்தார்கள். அதில் முத்து என்பவர்தான் இந்தப் படத்தில் உள்ள இளைஞர்களை எல்லாம் திரட்டிக் கொண்டுவந்து குரூப் போட்டோ எடுத்தார். இந்தப் படத்தில் இருப்பவர்கள் எல்லாம் கிழவனாகி விட்டார்கள் இன்று. இதை எடுத்து 42 ஆண்டுகள் ஆகிவிட்டன" என்கிறார் ஆசைத்தம்பி.
"அவரை மொத்தமாக 32 படங்களை எடுத்துள்ளேன். இந்தப் படங்களை நான் 1976 மற்றும் 77இல் எடுத்தேன். இந்த மொத்த படங்களையும் நான் 41 நாள்கள் செலவழித்து எடுத்தேன்.

அவ்வளவு நாள்கள் ஏன் என்றால், பல சினிமா புத்தகங்களில் உள்ள ஆக்ஷன் காட்சிகளை அவருக்கு விளக்கிச் சொல்லி, அதைப் போலவே அவரை நடிக்கவைத்து எடுத்தேன். அதில் அவர் வாயில் சிகரெட் பிடித்துள்ளதைப் போன்ற படம் ரஜினியை மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்தேன்.
அப்போதே அவர் ஆக்ஷன் ஹீரோவாகத்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்" என்கிறார் ஆசைத்தம்பி.

இத்தனைப் படங்களை விஜயகாந்த்தை வைத்து எடுத்த இவர், கடைசி வரை விஜயகாந்த்துடன் ஒரு படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. 'என்றைக்கு நீங்கப் பெரிய ஹீரோவா வருகிறீர்களோ அன்றைக்கு உங்களோடு சேர்ந்து படம் எடுத்துக் கொள்கிறேன்' என்று அப்போதே சொல்லி இருக்கிறார் இவர்.
ஆனால், அவரது ஆசை கடைசியில் நிராசையானதுதான் மிச்சம்.

"பகல் முழுக்க விஜயகாந்த் ரைஸ் மில்லில் வேலை பார்ப்பார். அந்தக் களைப்புடன் வந்து படம் எடுத்தால் நன்றாக இருக்காது என்று சொன்னேன். ஆகவே 2 மணிநேரமாவது நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு அதன்பின் வாருங்கள், அப்போதுதான் படங்களை எடுக்கும் போது நன்றாகத் தோற்றம் இருக்கும் என்றேன்" என்கிறார்
இவர் சொன்னதைப் போலவே விஜயகாந்த் தனது பேட்டியில் , "இரவு 12 மணிக்கு வரச்சொல்லி விடியற்காலை நான்கு மணி வரையில் பொறுமையாக ஸ்டில் எடுப்பார். உடனே அதைக் கழுவிப் பார்த்து நல்லா இருக்கு, அப்படி இல்லை என்றால் நல்லா இல்லை என்று சொல்லி நிறைய ஹெல் பண்ணினார். அப்படி எத்தனையோ நாட்கள்.

சில நேரங்களில் அப்பா எதிர்ப்பு சொல்லும்போது போட்டோவுக்கு பணம் கொடுக்க வசதி இருக்காது. 'அப்புறம் கொடுங்க'னு ஸ்டுடியோக்காரர் சொல்வார். அங்கே எடுத்த ஸ்டில்களுக்கு பில் மட்டும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகி இருக்கும்" என்று அந்தக் காலத்தில் விஜயகாந்த் பேசிய வார்த்தைகள் இவரது ஸ்டியோவை இப்போதும் அலங்கரிக்கின்றன.
"விஜயகாந்த் நிறம் கொஞ்சம் கம்மி. ஆகவே அவரைப் படம் எடுக்க 8 ஆயிரம் வாட்ஸ் பல்ப் போட்டு எடுத்தோம். அப்படி எடுக்கும்போது வெளியேறும் சூடு தாங்க முடியாது. வியர்த்து விறுவிறுத்து விடும். அதற்காக லைட் வைப்பதற்காகவே அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன்" என்கிறார் ஆசைத்தம்பி












Click it and Unblock the Notifications