தனியார் பள்ளிகளையே தலை சுற்ற வைக்கும் சென்னை அரசு பள்ளி... அட்மிஷனுக்காக அலை மோதும் பெற்றோர்.. செம்ம
சென்னை: தனியார் பள்ளிகளே மாணவ மாணவிகைள அதிக அளவில் சேர்க்கும் தண்ணீர் குடிக்கும் நிலை இருக்கிறது.. ஆனால் சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் அலை மோதுகிறார்கள்.. 6ம் வகுப்பு சேர்க்கைக்கு மொத்தமே 500 சீட்டுகளே உள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்போது கல்வி முறையில் கசப்பான உண்மைகள் என்னவென்றால், உயர் பணக்காரர்கள் சிபிஎஸ்இ பள்ளியிலும், நடுத்தர வர்க்கத்தினர் மெட்ரிகுலேசன் பள்ளியிலும், ஏழை மக்கள் அரசு பள்ளிகளிலும் படிக்கும் நிலை இருக்கிறது. கல்வி எல்லாமே ஒன்று தான் என்றாலும், கல்வி கற்கும் இடமும், கல்வி கற்க வரும் மாணவர்கள், வருமானத்தின் அடிப்படையில் பிரியும் நிலை இருக்கிறது.

இத்தனைக்கும் அரசு பள்ளியில் சேர்ந்தால், கட்டணம் இல்லை.. இலவசமாக பாட புத்தகங்கள், இலவச பஸ் பாஸ், ஸ்மார்ட் வகுப்பறை, இலவச சீருடை, காலை மற்றும் மதியம் சத்துணவு, மாதம் ஆயிரம் உதவி தொகை என அரசு பல வசதிகளை செய்து தருகிறது. அரசு பள்ளியில் படித்தால் அரசு வேலையில் இடஒதுக்கீடு, எம்பிபிஎஸ் படிக்க தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த வசதிகள் எல்லாம் ஏழைக்குழந்தைகள் பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
அதேநேரம் அரசு பள்ளியில் சேர்க்க நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உயர் பணக்காரர்கள் விரும்புவது இல்லை.. இதுதான் கசப்பான மற்றும் எதார்த்தமான உண்மையாக உள்ளது. தனியார் பள்ளிகளில் கல்வி சிறப்பாக இருக்கும் என்ற மாயையும், சிபிஎஸ்இ கல்வி முறை தான் உயர்ந்தது என்ற எண்ணமுமே இதற்கு காரணமாக உள்ளது,.
இதை உடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஐஏஏஸ், ஐபிஎஸ், நீதிபதி, ஆடிட்டர் மற்றும் எம்பிபிஸ் படித்து டாக்டர்கள் ஆகி வருகிறார்கள். அரசு வேலைகளில் அதிகம் சேருவோரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளே வாயை பிளக்கும் வகையில் சில அரசுபள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்கள் தவம் கிடக்கிறார்கள்.. அப்படிப்பட்ட பள்ளிகளில் முதன்மையானது சென்னை அசோக்நகர் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்வது கடினமானது. பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளே வாயை பிளக்கும் வகையில் வருடம் வருடம் பெற்றோர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்மார்ட் வகுப்பறைகள், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகள், ஆண்டுதோறும் 100 சதவீதம் தேர்ச்சி, தனியார் பள்ளிகளில் கூட இல்லாத அதிநவீன வசதிகள், ஆசிரியர்களின் அர்பணிப்பு, சென்னையில் அதிக பேரால் பாராட்டப்படும் அரசு பள்ளி என்ற பெயர் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் மாணவிகளை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான முதல் நாளே பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தார்கள். ஆறாம் வகுப்பில் 500 இடங்கள் மட்டுமே இருக்கிறது. முதல் நாளிலேயே முழுமையான இடங்கள் நிரம்பும் அளவிற்கு பெற்றோர்கள் குவிந்திருந்தார்கள்.
இங்கு பணி புரியும் தலைமை ஆசிரியர் முதல் ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவினரும் காட்டும் அர்பணிப்பு மற்றும் இங்கு ஏற்கனவே சேர்ந்த மாணவிகளின் கருத்துக்கள் காரணமாக பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடக்க பள்ளியை பொறுத்தவரை சென்னை பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அங்குமே மாணவர்கள் சேர்க்கைக்கு மக்களிடையே அதிக விருப்பம் உள்ளது. இதேபோல் காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியும் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் அதிகம் விரும்பும் பள்ளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications