காவி சர்ச்சைக்கு நடுவே.. வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்!
சென்னை: வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளையில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இது பார்க்க காவி நிறமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வந்தே பாரத் ரயில் பெட்டி ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் தேசியக்கொடி இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐசிஎப்பில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் இயங்கி வருகிறது. இதில் சில இடங்களில் நீலநிறம் உள்ளது. இதற்கிடையே தான் வந்தே பாரத் ரயிலின் நிறம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெள்ளை நிறத்தில் ரயில் இயக்கப்படுவதாக விரைவில் அழுக்காகி விடுகிறது. இதனால் ரயிலின் நிறத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதன்படி வந்தே பாரத் ரயிலை ஆரஞ்சு நிறத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் மட்டும் கிரே கலர் இடம்பெற உள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின.
இதனை பார்த்த பலரும் வந்தே பாரத் ரயிலுக்கும் காவி நிறத்தை மத்திய பாஜக அரசு பூசுவதாக குற்றம்சாட்டினர். இதற்கிடையே தான் ஆரஞ்சு மற்றும் கிரே வண்ணத்தில் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் நிறமாற்றம் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. தேசியக்கொடியின் தாக்கத்தினால் தான் ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது செயல்படுத்தப்படும்'' என்றார்.
அதாவது நம்நாட்டின் தேசியக்கொடியின் முதல் நிறமாக இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். இதனை டீப் சப்ரான், கேசரி, காவி எனவும் கூறுகிறார்கள். அந்த வண்ணத்தை தழுவி தான் வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications