மைசூரிலிருந்து சென்னை வரும் தமிழ் கல்வெட்டுகள்! அரை நூற்றாண்டு கனவு நனவானதாக சு.வெங்கடேசன் பெருமிதம்
சென்னை: மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அரை நூற்றாண்டு கனவு நனவானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெருமிதம்.
மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்திய தொல்லியல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகமண்டலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு 1966-ம் ஆண்டு மைசூருக்கு தமிழ் கல்வெட்டுகள் எடுத்துச்செல்லப்பட்டன. அங்கு தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை பலரும் குற்றம்சாட்டிவந்தனர்.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்தார். அதில், மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்பு சட்டப்படி, நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும் தொல்லியல்துறை தமிழ் தொடர்பான அனைத்து வரலாற்று ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.
தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்திய தொல்லியல் துறையினர் மைசூரில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவிட்டனர். அதேபோல், இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி 'தமிழ்க் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகம்' என அழைக்கப்படும் என்றும் தொல்லியல்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இதை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும், ''அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அலுவலகம் இனிமேல் "தமிழ் கல்வெட்டு அலுவலகம்" என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications