சிறுமி பாலியல் வழக்கு! கைதான அஸ்ஸாம் மாநில இளைஞரை ஆந்திர மாநில தாபாவுக்கு அழைத்துச் சென்றது ஏன்?
சென்னை: திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேற்றைய தினம் கைதான அஸ்ஸாம் மாநில நபரை கவரப்பேட்டை போலீஸார், ஆந்திர மாநில நெடுஞ்சாலையில் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபாவுக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்துவிட்டு தனியே சென்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வடமாநிலத்தவர் ஒருவர் மாந்தோப்பிற்குள் தூக்கிக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
அந்த நபரிடம் இருந்து சிறுமி இரு முறை தப்ப முயன்றும் ஓடி போய் தூக்கி வந்து அரைமணி நேரமாக குழந்தை சித்ரவதை செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தை அழுதுக் கொண்டே, சீருடை முழுவதும் ரத்தத்துடன் தனது தாயிடம் நடந்ததை சொன்னது.
இந்த நிலையில் சிறுமியின் தாய் போலீஸில் புகார் கொடுத்து 14 நாட்களாகியும் குற்றவாளி கிடைக்கவில்லை. அவர் ஆரம்பாக்கம் பகுதிகளில் சுற்றி திரிந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை சிறுமியிடம் காட்டிய போது அவர்தான் என்பதை உறுதி செய்தார்.
உடனே அந்த இளைஞரின் புகைப்படத்தை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிய போலீஸார், இவரை கண்டுபிடித்து கொடுத்தாலோ துப்பு கொடுத்தாலோ ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் சுற்றித் திரிந்தார்.
அவர், சிறுமியை வன்கொடுமை செய்த போது அணிந்திருந்த அதே உடையை அணிந்திருந்தார். இதனால் போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக இந்தியில் பேசியிருந்தார். இதையடுத்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சிறுமிக்கு, கைதான நபரின் புகைப்படத்தை அனுப்பி, அடையாளம் காட்ட சொன்னார்கள். அப்போது சிறுமி அவர்தான் என அடையாளம் காட்டினார். ஏற்கெனவே இரு வடமாநில நபர்களின் புகைப்படங்களை அடையாளம் காட்ட சொன்ன போது அவர்கள் இல்லை என்பதை சிறுமி கூறினார்.
ஆனால் இந்த முறை கைதான நபர்தான் அந்த மாபாதக செயலை செய்தவர் என்பதை சிறுமி அடையாளம் காட்டிவிட்டார். இதையடுத்து போலீஸார் அவரது புகைப்படத்தையும் பொதுவெளியில் வெளியிட்டனர். மேலும் அந்த நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்து விடிய விடிய விசாரணை நடத்தியிருந்தனர்.
இதையடுத்து அந்த நபரை சற்று நேரத்திற்கு முன்பு வெளியே அழைத்து வந்த நிலையில் காவல் துறையினர் அவரை எங்கோ அழைத்துச் சென்றனர். அப்போதுதான் அந்த நபர் ஆந்திர மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வடமாநிலத்தவரின் தாபாவில் பணியாற்றியது தெரியவந்தது.
இதனால் போலீஸார் அந்த நபரை தாபாவுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தினர். முதலில் தாபாவின் முன்பக்கம், பிறகு பின்பக்கம் என அழைத்துச் சென்றனர். அந்த தாபாவிலேயே தங்கியிருந்த அந்த நபர், அங்கு செல்போன் ஏதேனும் வைத்திருந்தாரா, அவருடைய உடமைகளில் என்னென்ன இருக்கிறது, போன்ற தகவல்களை ஆய்வு செய்ய அவரை தாபாவுக்கு அழைத்துச் சென்றனராம்.
விசாரணையில் அந்த நபர் சனி, ஞாயிறுகளில் விடுமுறை எடுத்துக் கொண்டு ரயில் மூலம் ஆரம்பாக்கத்தில் சுற்றி திரிவது, எங்காவது நோட்டமிடுவது போன்றவற்றை செய்து வந்தாராம். தாபாவில் அவர் ஏதேனும் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளாரா, இதுவரை வேறு எந்த பெண்ணையோ குழந்தைகளையோ பாலியல் தொல்லைக்குள்ளாக்கியிருக்கிறாரா, அல்லது கொள்ளை, திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications