அரசியல் சாயம் இல்லை! முதல்வரின் அதிரடி முடிவு! ஏ.பி.ஆர்.ஓ.க்கள் இனி நேரடி நியமனம்! இளைஞர்கள் ஹாப்பி!
சென்னை : செய்தித்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உயரிய பொறுப்பு, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு உள்ளது.
ஆனால், இத்துறையில் பணிபுரியும் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகளும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளும் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் தொடர்ந்து பணியிட மாற்றத்துக்கு ஆளாகின்றனர்.

உதவி மக்கள் தொடர்பு அதிகாரிள்
உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளை அரசியல் சிபாரிசு அடிப்படையில் நேரடியாக நியமிப்பதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்கின்றன. அரசியல் பின்னணியில் நியமனம் பெற்றாலும்கூட, அதை பணியில் காட்டாத அதிகாரிகளும் இருக்கின்றனர். சிலர், வெளிப்படையாக தெரியும் வகையில் விசுவாசிகளாக செயல்படும் உண்டு. இதுதான் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

அரசியல் சாயம்
ஒரு ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களை அடுத்து வரும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் நம்புவதில்லை. இதனால் முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கோ, தொலைதூர மாவட்டங்களுக்கோ அந்த அலுவலர்கள் மாற்றப்படுகின்றனர். அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகள் சிபாரிசு செய்பவர்களும் செய்தித் துறையில் நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவது பல ஆண்டுகளாக உள்ளது.

அரசியல் சாயம்
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசியல் சாயம் இல்லாத வேலையில்லா பட்டதாரிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பட்டதாரிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் 30க்கு மேற்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

திமுக அரசு
கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில் கிடந்த நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் இந்த பதவிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் செய்தித்துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணிகளில் இனி நேரடி நியமனத்துக்குப் பதிலாக டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதற்கும் இதழியல் படித்திருப்பது கட்டாயம் என அறிவித்திருப்பது குறிபிடப்பட்டிருக்கிறது.

வரவேற்பு
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் மட்டும் பட்டதாரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் மூலம் அரசியல் சாயமில்லாத அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications