பயணத்தின்போதே பணம் எடுக்கலாம்! ரயில் பயணிகளுக்கு வருது செம வசதி.. பெட்டியில் என்ன அது? நோட் பண்ணுங்க
சென்னை: ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சோதனை அடிப்படையில் வடக்கு ரயில்வேயில் இயங்கும் ரயில் ஒன்றில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகளின் இரண்டறக்கலந்த ஒன்றாக ரயில்கள் உள்ளன. நாடு முழுவதும் ஓடக்கூடிய பல ஆயிரம் ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். குறிப்பாக தொலை தூர நகரங்களுக்கு செல்லும் நடுத்தர வசதி மக்களின் முதல் சாய்ஸ் ரயில்கள்தான். பாதுகாப்பான பயணம், சொகுசு, டாய்லட் வசதி உள்ளிட்டவை இருப்பதால் அனைத்து தரப்பு பயணிகளும் விரும்பும்படி ரயில்கள் உள்ளன.

இந்தியன் ரயில்வே
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சமீப காலமாக ரயில்களில் பல்வேறு வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தொலை தூர பயணிகளுக்காக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. முழுவதும் ஏசி வசதி, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் உள்ளன. விரைவில் இந்த ரயில்களும் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளன.
ரயில்களில் ஏடிஎம் இயந்திரம்
இந்த நிலையில், ரயில்களிலேயே ஏடிஎம் வசதியை கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பரிசோதனை அடிப்படையில் தற்போது மும்பை - மன்மாத் இடையே ஓடும் பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயிலின் ஏசி வசதி கொண்ட பெட்டியில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. தனியார் வங்கியுடன் இணைந்து இந்த முயற்சியை ரயில்வே செய்துள்ளது.
விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த ஏடிஎம் கொண்டுவரப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயிலின் கடைசி பெட்டியின் கடைசி பக்கத்தில் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இடம் இதற்கு முன்பாக பேண்ட்ரிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஏடிஎம்களின் பாதுகாப்பிற்காக ஷட்டர் டோர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வேயின் முன் முயற்சி
ரயில்வே பணிமனையில் பெட்டிகளில் சில மாற்றங்கள் இதற்காக கொண்டு வரப்பட்டது" என்றார். தொலை தூரங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்லும் பயணிகளும் ரயில்களில் இருந்து இறங்கிய பிறகு பேருந்து அல்லது ஆட்டோ பிடித்து தங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார்கள். அவசரத்தில் ரயிலில் ஏறும் பயணிகள் ஒருவேளை கையில் ரொக்கமாக பணம் வைத்து இருக்காவிட்டால், ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு ஏடிஎம்களை தேடி அலைய வேண்டியிருக்கிறது.
தங்கள் லக்கேஜ்களுடன் இப்படி ஏடிஎம்களை தேடி அலையும் போது கடும் சிரமம் இருக்கிறது. எனவே ரயில்களில் ஏடிஎம் கொண்டு வரும் ரயில்வேயின் முன்முயற்சி பயனுள்ள ஒன்றுதான் என பயணிகள் பலரும் கூறியுள்ளனர். அதேவேளையில், தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டதாகவும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசதி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும்..
காலம் கடந்த செயல்
தற்போதைய நடவடிக்கை காலம் கடந்த செயல் எனவும் சில பயணிகள் தெரிவித்துள்ளனர். எனினும், ரயில்களில் ஏடிஎம் வைக்கும் வசதி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா? எல்லது சொகுசு ரயில்களில் மட்டுமே இருக்குமா? என்பது பற்றி ரயில்வே விரிவான தகவலை தெரிவிக்கவில்லை.
இதேபோன்று முழு நீளம் கொண்ட ரயில்களில் எந்த பெட்டியில் ஏடிஎம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் என்றும், இதற்கு பதிலாக அனைத்து ரயில் நிலைய நுழைவு வாயிற்பகுதியில் ஏடிஎம் இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்தாலே போதும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
