தமிழ்நாட்டில் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாறுதல்.. ஜூன் 15 முதல் சூப்பர் நடைமுறை.. பலன்கள்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் மாதம் 15-ம்தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தால் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் மிகப்பெரிய நன்மை நடக்க போகிறது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் விவகாரங்களில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. பத்திரப்பதிவு செய்த கையோடு பட்டாக்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒரு நிலத்தை அல்லது வீட்டை கிரயம் செய்த கையோடு, பட்டா மாறுதலும் செய்யப்படும்.

இதேபோல் பத்திரப்பதிவில் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அடுக்குமாடி சொத்துக்களை வாங்குவோருக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக அதிலும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அடுத்ததாக கிரைய பதிவை ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து செய்தால், அதனால் சொத்து உரிமையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே இருந்தது. இதனால் புதிதாக 9 சதவீதம் கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் கிரைய பதிவை ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து செய்தால் அதற்கு வெறும் 1000 கட்டணம் செலுத்திவிட்டால் போதும். பழைய படி பத்திரம் யார் பெயரில் இருந்ததோ அவருக்கே உரிமை சென்றுவிடும். இப்படி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் ஜூன் மாதம் 15-ம்தேதி முதல், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றும் செய்யும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் கிரையம் கொடுப்பவருக்கும், கிரையம் பெறுபவருக்கும் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும்.
நீங்கள் பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யும் சொத்து விவரங்களின் அடிப்படையில் தான் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாறுதல் நடைபெற போகிறது. இதன் மூலம் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு பட்டா கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய நடைமுறையின் படி, வாங்கப்படும் சொத்தின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்பான தகவல்களை பதிவுத்துறையே வருவாய்துறைக்கு தெரிவித்துவிடும். பதிவுத்துறை அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இப்போது தானியங்கி முறையிலும் பதிவுத்துறை அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் இன்றி பட்டா கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறும் போது, பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்திட வரும் ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இதனை செயல்படுத்த பத்திரப் பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாக கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்க உள்ளோம்.
உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும். எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையைப் பெற தங்கள் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை இதற்கு வழங்க வேண்டும்.
இதன் காரணமாக பத்திரப்பதிவுக்கான ஆவணத் தயாரிப்பின் போது சில விவரங்களை சரிபார்த்துக் கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவே கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்து விவரமும் அளவுகளும், நான்கெல்லைகளும் வருவாய்த்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்படி ஆவணம் தயாரிக்க வேண்டும். முன் ஆவணச் சொத்து இதர விவரங்களை சரிபார்த்து பத்திர ஆவணம் தயாரிக்க வேண்டும். குறிப்பாக சொத்து வரியின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது, வரிவிதிப்பு பெயர்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும்.
இறந்தவர் பெயரில் பட்டா இருப்பின் பட்டாவில் வாரிசுகள் பெயரை சேர்த்த பின் ஆவணம் கண்டிப்பாக தயாரிக்க வேண்டும். கூட்டுப்பட்டா என்றால், தனிப்பட்டாவாக மாற்றியபின் ஆவணம் தயாரிக்க வேண்டும். இந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த நடைமுறை காரணமாக விஏஓ, நில அளவையர், தாசில்தார் என யாருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது.












Click it and Unblock the Notifications