அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: “இது எங்க ஏரியா”.. 3வது சுற்றில் 8 காளைகளை அடக்கினார் அவனியாபுரம் கார்த்தி
சென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கி வருகின்றனர். முதல் 2 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், மாடுபிடி வீரர்கள் 33 மாடுகளைப் பிடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பல இடங்களில் தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்க முதல் சுற்றுக்கு 50 வீரர்கள் மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்து களம் இறங்கினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆயிரத்து 1100 காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ள நிலையில், 900 வீரர்கள் களம் காண உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக நிசான் கார் வழங்கப்பட உள்ளது. அதே போன்று, சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர், துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் பரிசு வழங்கப்படுகிறது. அனைத்து காளைக்கும் ஐந்தடுக்கு டிபன் பாக்ஸ், வேஷ்டி துண்டு பரிசாக வழங்கப்படுகிறது.
முன்னதாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2026 காளைகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த நிலையில், 1100 காளைகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கு காளைகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
முதல் சுற்று
முதல் சுற்றில் மொத்தமாக 73 மாடுகள் களம் கண்ட நிலையில், 11 மாடுகள் பிடி மாடுகள் ஆகின. தலா இரு மாடுகள் பிடித்த மணிகண்டன், அவனியாபுரம் (Y 38) - 3; சுஜித்குமார், கரடிக்கல் (Y 16) - 2 இருவரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். மணிகண்டன், காயமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டாம் சுற்று
இரண்டாம் சுற்றில், மொத்தமாக 82 மாடுகள் களம் கண்ட நிலையில், 22 மாடுகள் பிடிபட்டன. இரண்டாம் சுற்று முடிவில் (சதீஷ்குமார், சமயநல்லூர் (R 75) - 3 காளை, பிரசாந்த், வாடிப்பட்டி (R 69) - 2 காளை, வல்லரசு, நாகமலை புதுக்கோட்டை (R 76) - 2 காளை, விக்னேஷ், சமயநல்லூர் (R 88) - 2, இன்பசேகரன், சமயநல்லூர் (R 86) - 2 காளை, அஜய், தேனூர் (R 82) - 2 காளை) ஆறு நபர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மூன்றாம் சுற்று
மூன்றாம் சுற்றில், மொத்தமாக 89 மாடுகள் களம் கண்ட நிலையில், 27 மாடுகள் பிடிபட்டன. மூன்றாவது சுற்றில் 8 காளைகளை அடக்கினார் அவனியாபுரம் கார்த்தி. 7 காளைகளை அடக்கினார் குன்னத்தூர் திவாகர். சோலையழகுபுரம் ராகவா 3 காளைகளை அடக்கியுள்ளார். இவர்கள் உட்பட 4 நபர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications