நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் ஆர்பிவிஎஸ் மணியன் ஜாமீன் மனு அதிரடியாக தள்ளுபடி.. ஏன்?
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரில் செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது இந்திய தண்டனை சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாம்பலம் காவல் நிலையத்தினரால் செப்ட்மபர் 22ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்ட நிலையில், உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்து, நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்.

காவல்துறை தரப்பில் வெறுப்பு மற்றும் அவமதிப்பு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும், மருத்துவ சான்றுகள் அனைத்துமே 2 ஆண்டுககுக்கு முன்பானவை என கூறி, மணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மணியனின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அல்லி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications