சென்னையில் பயங்கரம்: காதல் மனைவி கழுத்தை அறுத்தே கொலை செய்த வங்கி மேனேஜர்.. சந்தேகத்தால் படுகொலை!
சென்னை: சென்னை மண்ணடியில் நடத்தை மீது சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து வங்கி மேனேஜர் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆசிஃப் ( வயது 43). சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரியங்கா பாட்லா என்பவரை காதல் திருமணம் செய்தார் ஆசிஃப். இருவரும் மதம் மாறித்தான் திருமணம் செய்தனர். இதனால் இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.
ஆசிஃப்பும் அவரது மனைவி பிரியங்காவும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மண்ணடியில் குடியேறினர். பின்னர் சென்னை மயிலாப்பூர் வங்கி ஒன்றில் ஆசிஃப்பும் போரூர் ஐடி நிறுவனத்தில் பிரியங்காவும் பணிபுரிந்து வந்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

தகாத உறவால் சண்டை
இன்னொரு பக்கம், பிரியங்கா பாட்லாவுக்கும் அவர் பணிபுரிந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவருக்கும் இடையே தகாத தொடர்பு உள்ளது என்பது ஆசிஃப்பின் சந்தேகம். இதனை ஆசிஃப் பலமுறை கண்டித்திருக்கிறார். இதனால் ஆசிஃப் - பிரியங்கா இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

பிரியங்காவின் மரண ஓலம்
இந்நிலையில்தான் இன்று ஆசிஃப்பும் பிரியங்காவும் வீட்டில் இருந்துள்ளனர். இன்று பிற்பகல் திடீரென வீட்டுக்குள் இருந்து பிரியங்காவின் மரண ஓலம் அப்பகுதியையே குலைநடுங்க வைத்திருக்கிறது. அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள், பிரியங்கா வீட்டு கதவை பலமாக தட்டி இருக்கின்றனர். அப்போது சினிமா வில்லன் போல, கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் ஆசிஃப் கதவை திறந்து நின்றதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ரத்தம் சொட்ட கத்தியுடன்...
இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கையில் ரத்தம் சொட்ட கத்தியுடன் இருந்த ஆசிஃப்பை மடக்கினர். அப்போது, நான் தான் கத்தியால் மனைவி கழுத்தை அறுத்தேன் என ஆசிஃப் கூறியிருக்கிறார். பின்னர் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதிரவைத்த ஆசிஃப் வாக்குமூலம்
இக்கொலை தொடர்பாக போலீசில் வாக்குமூலம் அளித்த ஆசிஃப், மனைவி பிரியங்காவுடன் இன்றும் வழக்கம் போல சண்டை ஏற்பட்டது. அப்போது பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறுவதாக சொன்னார். அத்துடன் அவரது டிரஸ் உள்ளிட்டவற்றை பையில் எடுத்து வைத்து கொண்டு கிளம்பினார். இதனால் வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டினார். அந்த ஆத்திரத்தில் காய்கறி நறுக்கும் கத்தியால் பிரியங்காவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என கூறியிருக்கிறார். சென்னையில் பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications