மார்ச் 24, 25-ந் தேதிகளில் வங்கிகள் ஸ்டிரைக்.. முன்னால் உள்ள நாட்களை கவனித்தீர்களா.. பெரிய சிக்கல்
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஸ்டிரைக் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும், பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும், பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்தன.

பேச்சுவார்த்தை
9 வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. வேலை நிறுத்தம் தொடர்பாக முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
கோரிக்கைகள் என்னென்ன
இதன்படி பேச்சுவார்த்தையும் நடந்தது.. அந்த பேச்சுவார்த்தையின்போது, வாரத்தில் 5 நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் வலியுறுத்தியது. மேலும் பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அதற்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு முன்வைத்தது. ஆனால் வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வங்கிள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்டிரைக் உறுதி
தங்களது முக்கிய கோரிக்கைகள் எவற்றையும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல்.சந்திரசேகர் அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி, 24 மற்றும் 25-ந் தேதிகளில் நாடுதழுவிய 2 நாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் நடைபெறும் என்றும் கூறினார். இதன்படி திட்டமிட்டபடி வருகிற மார்ச் 24 மற்றும் 25-ந் தேதிகளில் வங்கிகள் ஸ்டிரைக் உறுதியாகி உள்ளது.
நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது
வங்கிகள் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயங்காது. ஞாயிறு விடுமுறை. அந்த வகையில் மார்ச் 22 சனிக்கிழமை விடுமுறை, 23ம் தேதி ஞாயிறு விடுமுறை, மார்ச் 24ம் தேதி திங்கள் கிழமை ஸ்டிரைக், மார்ச் 25ம் தேதி செவ்வாய்கிழமை ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட நான்கு நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே வங்கி சேவையை பயன்படுத்துவோர் மார்ச் 22ம் தேதிக்குள் முக்கிய பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் மார்ச் 26ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications