சர்ச்சை பேச்சால் சங்கடம்..ரொம்ப கவனம்.. அமைச்சர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி ஆர்டர்
சென்னை: மூத்த அமைச்சர்கள் பேசும் பேச்சுகள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருவது முதல்வருக்கு சங்கடமாகி அவரது தூக்கத்தை கெடுக்கிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேசும் பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப்பொருளாகி வருகிறது. கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, நாளைக்கு என்ன பிரச்சினை வருமோ என்ற அச்சத்துடனேயே தூங்கப்போவதாகவும் சில நாட்களில் தூக்கம் வராமல் தவிப்பதாகவும் கூறியிருந்தார். எனவே பொது இடங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். முதல்வர் என்ன சொன்னாலும் அதை சில அமைச்சர்கள் கேட்பதாக இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 5ஆம் தேதி குடியரசு தலைவர் தமிழ்நாடு வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், மூத்த அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளும், அதனால் எழும் விமர்சனங்களும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி பேசும் போது விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசுவதை மூத்த அமைச்சர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என முதல்வர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் மூத்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பேசி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications