நடிகை கனகா, பாவாடை தாவணியில் தெருவில் வந்தாங்க, திகைச்சுட்டேன்..ஸாரி பானுப்ரியா: அட "கரகாட்டக்காரன்"
சென்னை: பாஜக ஆதரவாளரும், பிரபல டைரக்டரும், இசையமைப்பாளருமான கங்கைஅமரன், தான் இயக்கிய கரகாரட்டக்காரன் படம் குறித்து சில விஷயங்களை மனம்திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோவை, ரசிகர்கள் தற்போது இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில், வெகுசில படங்களே நிலைத்து நிற்கும்.. அதில் ஒன்றுதான் கங்கைஅமரனின் கரகாட்டக்காரன் திரைப்படம்.. 35 வருடங்களுக்கு முன்புவெளிவந்த இந்த படம், இப்போதுகூட, ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது.
ஜூன் 16, 1989ல் ரிலீஸ் ஆனது இந்த படம்.. தியேட்டர்களில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது.. அதாவது கரகாரட்டக்காரன் 425 நாட்கள் ஓடியது என்பார்கள்.

இந்த படத்தின் வெற்றி என்பது 80-களின் இறுதியில் ஈடு இணையில்லாததாக அமைந்தது.. கமல் ஒருபக்கம், ரஜினி மறுபக்கம் என சாகச படங்களில் அதிரடிகளை காட்டிக்கொண்டிருக்க, தென்றலாய் தவழ்ந்து வந்தார் ராமராஜன்.
இளையராஜா: கவுண்டமணி காமெடி, இளையராஜாவின் இசை என படம் முழுவதும் கிராமிய நெடி, தமிழக மக்களின் மூக்கை துளைத்துக் கொண்டு போனது.. இத்தனைக்கும் படத்தில், புதுமை, வித்தியாசம் என்று எதுவுமேயில்லை.. கதையும் பெரிதாக இல்லை.. 1968-ல் வெளியான "தில்லானா மோகனாம்பாள்" படத்தின் பிரதிபலிப்புதான் என்பதை பலரும் அறியாமல் இல்லை.. இரு வேறு துறையை சார்ந்த கலைஞர்களுக்கிடையே உருவான காதலை மையப்படுத்தியது தில்லானா மோகனாம்பாள் என்றால், கரகாட்டகாரன்' படமோ, ஒரே துறையை சார்ந்த இரு கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதலை சொல்லிவிட்டு போனது.
மாயாஜாலம்: தமிழ் சினிமாவில் மாயாஜாலத்தை நிகழ்த்திய இந்த படம் இன்னும் பல வருடத்துக்கு பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.. இப்போது விஷயம் என்னவென்றால், ஒரு டிவி சேனலுக்கு, கங்கை அமரன் ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில், கனகா குறித்து பேசியுள்ளார்.. கனகாவை எப்படி கரகாட்டக்காரன் படத்துக்கு ஹீரோயினாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை விளக்கமாக சொல்லி உள்ளார் கங்கை அமரன்.
"எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் கனகாவின் வீடு இருந்தது.. தேவிகா அம்மாவை ஏற்கனவே தெரியும்.. அன்னைக்கு யதேச்சையாக தேவிகா அம்மாவுடன் கனகா வாக்கிங் வந்துட்டு இருந்தாங்க.. உடனே "வாங்கம்மா" வீட்டுக்கு என்று என் மனைவி கூப்பிட்டாங்க.. அவங்களும் வீட்டுக்கு வந்தாங்க.. காபி, டீ சாப்பிட்டாங்க.. எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவில் அவர்கள் இருப்பதே எனக்கு அப்போதுதான் தெரியும்.. ஆனால் வாக்கிங் வரும்போது, கனகா பட்டு பாவாடை - தாவணியில் வந்திருந்தாங்க.
நடிகை தேவிகா: வாக்கிங் போறதுக்கு எதுக்கு பட்டுப்பாவாடை தாவணி? சாதாரண டிரஸ்ஸில் வரலாம் இல்ல? கரெக்ட்டா பிளான் பண்ணி அவங்கம்மா பாவாடை தாவணியில் கூட்டிட்டு வந்ததுபோலவே இருந்தது.. ஆனால், என் மனைவிதான் சொன்னாங்க, "இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க, சின்ன பொண்ணா இருக்கிறாள், உங்க படத்துக்கு ஹீரோயினா போட்டுக்குங்க"ன்னு சொன்னாங்க.. அதுக்கப்பறம்தான் கனகாவை செலக்ட் செய்தோம்..
அதற்கு முன்புவரை பானுப்பிரியாவைதான், கரகாட்டக்காரன் படத்துக்கு ஹீரோயினாக செலக்ட் பண்ணி வைத்திருந்தோம்.. அப்போதுகூட எனக்கு பானுப்பிரியாவை பிடிக்கல. மேக்கப் போடாமல், அப்போ வந்திருந்தாங்க.. அதனால் கொஞ்சம் கலர் கம்மியா தெரிந்தது.. மேக்கப் போட்டு சரி செய்து கொள்ளலாம் என்ற அறிவுகூட எனக்கு அப்போது இல்லாமல் போய்விட்டது..

பாக்யராஜ்: பாக்யராஜ்தான், பானுப்பிரியாவை அந்த படத்திற்காக என்னிடம் சிபாரிசு செய்தார்.. என் அண்ணனும் பானுப்பிரியாவைதான் ஹீரோயினாக போட சொன்னார்.. அப்போதுகூட ஒருவித தயக்கத்திலேயே நான் இருந்தேன்.. அந்த நேரம்பார்த்துதான், கனகாவை பார்த்தேன்.. அந்த பெண் ரொம்ப இயல்பாக இருக்கவும், உடனே ஹீரோயினாக நடிக்க வெச்சிட்டோம். இருந்தாலும் பானுப்பிரியா நடிக்க வேண்டிய படம் அது.. பானுப்பிரியாவுக்கு ஸாரி.. அதுக்கப்பறம் நல்லா வளர்ந்துட்டாங்க அவங்க.. ரொம்ப நல்ல பொண்ணு பானுப்பிரியா.. என்று நெகிழ்ந்து கூறினார் கங்கை அமரன்.












Click it and Unblock the Notifications