பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு பயங்கரவாதி தமிழ்நாட்டில் பதுங்கல்? 3 மாநிலங்களில் தேடுதல்!
சென்னை: கர்நாடகா மாநிலம் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு 18-வது லோக்சபா தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. லோக்சபா தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் பிரபலமான உணவகம் ராமேஸ்வரம் கஃபே. பெங்களூர் ஒயிட் பீல்டு ராமேஸ்வரம் கஃபேயில் வெள்ளிக்கிழமையன்று பகல் 12.55 மணிக்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் மொத்தம் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டதால் பெங்களூர் மாநகரில் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் ஹெச்.எல். போலீசார் "ஊபா" சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான (NIA என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனையும் ஆய்வும் மேற்கொண்டனர். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கும் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது புலனாய்வு துறை அதிகாரிகளின் சந்தேகம். தற்போதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை தேடி கண்டுபிடிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் பல பகுதிகளில் முகாமிட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூர் உட்பட கர்நாடகாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா? ராமேஸ்வரம் கஃபே ஊழியர்களுக்கு இதில் தொடர்பிருக்கிறதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications