“பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறது” - கனிமொழி எம்.பி அட்டாக்
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை அதிமுகவுடன் பாஜக இன்று உறுதி செய்திருக்கிறது. இதனை விமர்சித்துள்ள திமுக எம்பி கனிமொழி, பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்திருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, "இனிமேல் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று தன்னுடைய கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சுட்டிக் காட்டி இருந்தார்.

பல்வேறு சமயங்களில் பாஜக கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து வருவதாக கூறும் எடப்பாடி பழனிசாமி, அதே மேடையில் மவுனமாக இருந்து கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டதாக அதிமுக கூறியபோதிலும், இரு கட்சிகளும் தொடர்பிலேயே இருந்துள்ளனர். தற்போது வெளிப்படையாக கூட்டணியை அறிவித்து விட்டனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து விமர்சித்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
கல்வி நிதி, வக்ஃப் சட்டம், நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிய அதிமுக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றியவர்களுடன் அமர்ந்துள்ளார். மேடையில் பேசக்கூட எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி வழங்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்து விட்டார். பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவர்.
தமிழுக்காக பாஜக அரசு என்ன செய்து விட்டது? தமிழை வளர்ப்பதாக சொல்லும் இவர்கள்தான், தமிழுக்காக ரூ.100 கோடிகூட ஒதுக்கவில்லை. திருக்குறளை பிரதமர், அமைச்சர்கள் சுட்டிக்காட்டி பேசுவதை வைத்து, அவர்கள் தமிழை வளர்ப்பதாகக் கருத முடியாது. ஒன்றிய அரசை விமர்சிப்பவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனையை நடத்துகிறது என்று" கூறினார்.












Click it and Unblock the Notifications