நேரு முதல் சச்சின் வரை’பாரத ரத்னா’ சர்ச்சைகள்! தமிழர்கள்தான் டாப்!
சென்னை: ’பாரத ரத்னா’ விருதை இதுவரை அதிகம் தமிழர்களே பெற்றுள்ளனர் என்பது பலரும் அறியாத செய்தி. 2024 ஆம் ஆண்டுக்கான ' 'பாரத ரத்னா’ விருதுகளை சில தினங்கள் முன்னதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கர்பூரி தாக்கூர், பாஜகவின் துணைப் பிரதமராக இருந்த எல்.கே. அத்வானி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ், லோக்தள் கட்சியின் நிறுவனர் செளத்ரி சரண் சிங், இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோர் விருதுக்குரியவர்களாக தேர்வாகி உள்ளனர்.

வழக்கம் போலவே இம்முறையும் இந்த விருது அரசியல் சர்ச்சையில் சிக்கி உள்ளது. குறிப்பாக எல்.கே. அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
1990க்குப் பின் ராமர் கோயில் ரத யாத்திரையில் முகமாக இருந்தவர் அத்வானி. பாபர் மசூதி இடிப்பு விவகார சர்ச்சையிலும் அடிப்பட்டவர். இன்னும் அழுத்தமாகச் சொன்னால், எதிர்க்கட்சிகளால் அந்தப் பிரச்சினையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டவர்.
அவருக்கு 'பாரத ரத்னா’ அறிவிக்கப்பட்டுள்ளதை 90 ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகிவரும் ஒரு வார இதழ் பா 'ரத’ ரத்னா என்று கார்ட்டூன் போட்டு விமர்சித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவே கவுடா கூட 'யாரும் 'பாரத ரத்னா’ விருது குறித்த சர்ச்சையில் ஈடுபட வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
நாட்டின் உயர்ந்த குடிமகன் என்ற அடையாளத்தோடு வழங்கப்படும் இந்த விருது சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இப்படிப் பலமுறை எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விருதானது 1954ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் மத்திய அரசால் நிறுவப் பட்டது. இதுவரை 48 பேருக்குப் பாரத ரத்னா அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 5 பேரையும் சேர்த்தால் மொத்தம் 53 பேருக்கு இது வழங்கப்பட்டுள்ளது. அதில் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.

ஒருவர் மரணமடைந்த பிறகு 'பாரத ரத்னா’ வழங்கப்படும் விதிமுறையானது விருது ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருக்கவில்லை. மறைந்துபோன சிலரையும் கௌரவிப்பதற்காக விருதின் விதிமுறைகளில் 1966 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப் பட்டது. மரணமடைந்ததற்குப் பின்னர் கௌரவிக்கப்பட்ட முதல் நபர் லால்பகதூர் சாஸ்திரி. விதிமுறை மாற்றங்கள் செய்த பிறகு இவரைச் சென்றடைந்தது இந்த விருது.
அதைப்போன்று 1977 ஜூலை முதல் 1980 ஜனவரி வரை முதல் முறையாக இந்த விருது யாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் 2ஆவது முறையாக 1992 ஆகஸ்ட் முதல் 1995 டிசம்பர் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரதமராகப் பதவியில் வகித்தபோதே இந்த விருதை ஜவஹர்லால் நேரு 1955 இல் பெற்றார். அடுத்து இந்திரா காந்தியும் பிரதமராக இருந்தபோது 1971 இல் பெற்றார். இந்த இருவரும் தங்களுக்கு தாங்களே விருதைக் கொடுத்துக் கொண்டனர் என்று இவர்கள் அந்நாளில் விமர்சிக்கப்பட்டனர்.

இப்போது கூட ஃபேஸ்புக் பக்கத்தில் மூத்த பத்திரிகையாளரும் பாஜக ஆதரவாளருமான மாலன், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், அப்படி ஒரு சர்ச்சை உருவான காலத்திலேயே அதற்கு விளக்கம் அளிக்கப் பட்டது. குடியரசுத் தலைவரின் பரிந்துரை பெயரிலேயே இந்த இருவருக்கும் விருது வழங்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் சொன்னது.
அடுத்த சர்ச்சை நடந்தது 1976இல். முன்னாள் முதல்வர் காமராஜருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டபோது, அரசியல் ரீதியாகக் காங்கிரஸ் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்ற குரல் எழுந்தது. இதைப்போலவே 1988இல் எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கொடுக்கப்பட்ட போது, இது தேர்தல் அரசியலுக்காக வழங்கப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

அதைவிட பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 1990இல் தொடங்கியது. நாடு முழுவதும் பட்டியலின மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்தனர். அந்தச் சமயம் பார்த்து அம்பேத்கருக்குப் பாரத ரத்னா வழங்கப்பட்டது. அப்போது பலரும் நாட்டின் சட்ட மேதையான அம்பேத்கருக்கு முன்னர் எம்.ஜி,ஆருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதை விமர்சித்தனர். அதன்பின்னர் கூட அந்த விமர்சன அலை ஓய்ந்துவிடவில்லை.
இந்தியச் சுதந்திரத்தின் மாபெரும் தலைவராக அடையாளம் காணப்பட்ட சுபாஷ் சந்திர போசுக்கு 1992இல் இந்த விருது அறிவிக்கப்பட்டது. மரணத்திற்குப் பிறகு விருது பெரும் தலைவர் என்ற பிரிவின் கீழ் அறிவிப்பு வெளியானது. ஆனால், அதை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. மனுதாரர் போஸின் மரணத்தை இதுவரை அரசு உறுதி செய்யவில்லை. ஆகவே, அந்த விதியின் கீழ் இவருக்கு விருது அறிவிப்பது சட்டப்படி செல்லாது என்று வாதிட்டார்.
அது மட்டுமல்லாமல் சுபாஷ் சந்திரபோஸ் மாபெரும் தலைவர். அவருக்குக் காலம் கடந்து இந்த விருதை அறிவிப்பது 'கேலி’யானது என்றும் கவலை தரும் செயல் என்று வாதிட்டார்.
மேலும் போசுக்கு முன்னதாக அடுத்தகட்ட தலைவர்கள் இந்த விருதைப் பெற்று விட்டதால் அவரது குடும்பத்தினர் அதனை வாங்க மறுப்பு தெரிவித்தனர். ஆகையால் அறிவிப்புடன் விருது நின்றுவிட்டது. நீதிமன்றமும் விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படாததால் அதைத் திரும்பப் பெறச் சொல்லி உத்தரவிடமுடியாது என்று கூறிவிட்டது.
2014இல் காங்கிரஸ் அரசு சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருதை அறிவித்த போது அது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஓட்டு அரசியலுக்காக இதை அரசு அறிவித்திருக்கிறது என வழக்கம் போல் போர்க்கொடி பிடித்தனர் எதிர்க்கட்சிகள்.
இதை எல்லாம் கடந்து பாரத ரத்னா விருதில் தமிழர்களுக்கு என்று ஒரு தனிப் பெருமை உள்ளது. அது என்னவென்றால், இந்த விருதை முதன்முதலாகப் பெற்றவர் ஒரு தமிழ்நாட்டுத் தலைவர். இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவி வகுத்த ராஜகோபாலாச்சாரியார் தான் அவர். சுருக்கமாக ராஜாஜி.
அடுத்ததாக இரண்டாவது விருதைப் பெற்றவரும் தமிழ்நாட்டுக்காரர்தான். நாடு முழுவதும் அவரது பிறந்தநாளைத்தான் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரான சாட்சாத் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தான் அவர்.
மூன்றாவது விருதும் ஒரு தமிழருக்குத்தான் கிடைத்தது. அறிவியல் உலகின் மாபெரும் மேதையான சர் சி.வி.ராமன் தான் அவர். அதன் பின்னர் படிக்காத மேதை காமராஜர் பெற்றார். அடுத்து எம்.ஜி.ஆர். அப்புறம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவர் 1997இல் இதை பெற்றார். 1998இல் மீண்டும் இரண்டு தமிழர்களுக்கு இந்த விருது கிடைத்தது.
ஒருவர் இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி. அடுத்தவர் சி. சுப்பிரமணியம். இவர் மத்திய விவசாய அமைச்சராக இருந்த போது இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இவர்தான் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தார். அதன் அடையாளமாக இவருக்கு 'பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
முதல் விருதைப் பெற்றவர் தமிழர். இப்போது 53வது விருதைப் பெற்ற எம்.எஸ். சுவாமிநாதனும் தமிழர். ஆக மொத்தமாக இதுவரை இந்த விருதை அதிகம் தமிழர்களே பெற்றுள்ளனர். மொத்தம் 9 பேர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications