தமிழ் தாய் வாழ்த்தை மாற்றிய சீமான்.. ‛தமிழ்நாடு நாள்’ பொதுக்கூட்டத்தில் ஒலித்த பாரதிதாசன் பாடல்
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் ‛தமிழ்நாடு நாள்' பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடலாக பாவேந்தர் பாரதிதாசனின் ‛வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனும் பாடல் ஒலிக்கப்பட்டது.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மெட்ராஸ் மகாணத்தில் தற்போதைய கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் இணைந்து இருந்தன. 1950ல் சுதந்திரத்துக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1956ல் மெட்ராஸ் மாகாணத்தின் அங்கமாக பகுதிகள் தனித்தனி மாநிலமாக மாறின. அதன்படி கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இ இது 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி நாடு முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதியை கர்நாடகா கன்னட ராஜ்யோத்சவா என்ற பெயரில் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதேபோல் கேரளா பிறவி தினத்தை கொண்டாடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த நவம்பர் 1ம் தேதியை மையப்படுத்தி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவது இல்லை. தமிழ்நாடு என பெயரிடப்பட்ட ஜூலை 18 ம் தேதியை தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடி வருகிறோம்.
ஆனால் இந்த நிலைப்பாட்டை நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கவில்லை. நவம்பர் 1ம் தேதி தான் தமிழ்நாடு தினம் என கூறி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு நாள் தினமாக நாம் தமிழர் கட்சி நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நாள் தினம் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சோழிங்கநல்லூரியில் பொதுக்கூட்டமாக நடத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்பாக தமிழ்நாடு என்று பெயர் வைக்ககோரி உயிர் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து பாடலாக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய, ‛‛நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்ற பாடல் உள்ளது. இந்த பாடலுக்கு பதிலாக இன்று நடந்த சீமான் பொதுக்கூட்டத்தில் வேறு பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
தமிழ்தாய் வாழ்த்து என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கூற பாவேந்தர் பாரதிதாசனின், ‛‛வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே..'' என்ற பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த பாடல் என்பது புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்தாக உள்ள நிலையில் சீமான் பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி
தமிழ்நாடு நாள் பொதுக்கூட்ட மேடையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் பாடல் தமிழ்த்தாய் பாடலாக ஒலிக்கப்பட்டது. #தமிழ்நாடுநாள்_2024 pic.twitter.com/RklEagNRNZ
— NTK IT Wing (@_ITWingNTK) November 1, 2024
என்ற வரிகள் மேடையில் தெரிய சீமான் உள்பட அனைத்து நிர்வாகிகளும் இந்த பாடலை பாடினர். அதன்பிறகு பொதுக்கூட்டம் தொடங்கி சீமான் பேச தொடங்கினார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றி தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்தாய் வாழ்த்து பாடலில் திராவிட நல் திருநாடும் என்ற வரி வருகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்க இந்தி மாத நிறைவு விழாவில் அந்த வரி மிஸ்ஸானது சர்ச்சையானது. அதன்பிறகு தமிழ்தாய் வாழ்த்து பற்றி பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சைக்கு நடுவே சீமான், வழக்கம்போல் தனது கருத்தை முன்வைத்தார். அதன்படி நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாய் வாழ்த்து மாற்றம் செய்யப்படும் என்று ஏற்கனவே கூறிய கருத்தை தெரிவித்து இருந்தார். பாரதிதாசன் பாடல் தமிழ்தாய் வாழ்த்தாக வைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் ‛வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்ற பாடல் தமிழ்தாய் வாழ்த்தாக ஒலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications