“சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர்".. பாரதியார் பிறந்தநாளுக்கு வைரமுத்து கவிதை!
சென்னை: மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பிறந்தநாளையொட்டி இன்று, கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி. தம் கவித்துவ, புரட்சிகர எழுத்துகள் மூலமாக எண்ணற்ற மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:

ஒரு மகாகவி ஜனிப்பது
சதைவழிப்பட்ட
புழைவழியல்ல
காலம்
தன்னை யுகம்செய்துகொள்ள
ஒருவனைத்
தட்டித் தட்டித் தயாரிக்கிறது
அவனை
வறுமையால் ஆசீர்வதிக்கிறது
சனாதனத்தின்மீது மீசை வைக்கிறது
நூற்றாண்டுப் புழுக்கத்தில்
நுரையீரைலைப் பட்டினியிடுகிறது
சாப்பாட்டைப் பறித்து
சாம்ராஜ்யத்தோடு
சண்டையிடச் செய்கிறது
முக்காலம் இருள்செய்து
மூளைக்குள் சூரியன் வைக்கிறது
ராஜசபைகளில் மொழிபயிற்றிப்
பாமரவெளியில் பாடச்செய்கிறது
ஏதேனுமொரு தீயில்
இட்டு இட்டுச்
சுட்டுச் சுட்டுத்
தங்கம்தான் என்று
சான்றளிக்கிறது
தெருவைத் திரட்டி
அவமதிக்கச் செய்கிறது
தேசத்தையே கூட்டி
அஞ்சலிக்கச் சொல்கிறது
ஆயுளைப் பறிக்கிறது
புகழைத் திணிக்கிறது
மண்ணுக்குள் புதைத்து
மகாகவி ஆக்குகிறது
அவன்
அக்கிரகாரத்தான் என்று சிலர்
அலட்சியம் செய்யாதீர்;
சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று
சகலரும் கொண்டாடுவீர்
வாழ்க பாரதி!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஒரு மகாகவி ஜனிப்பது
— வைரமுத்து (@Vairamuthu) December 11, 2025
சதைவழிப்பட்ட
புழைவழியல்ல
காலம்
தன்னை யுகம்செய்துகொள்ள
ஒருவனைத்
தட்டித் தட்டித் தயாரிக்கிறது
அவனை
வறுமையால் ஆசீர்வதிக்கிறது
சனாதனத்தின்மீது மீசைவைக்கிறது
நூற்றாண்டுப் புழுக்கத்தில்
நுரையீரைலைப் பட்டினியிடுகிறது
சாப்பாட்டைப் பறித்து
சாம்ராஜ்யத்தோடு… pic.twitter.com/cZm8y3si9E
இன்றைய தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னச்சாமி ஐயர் இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணி. இவரது கவிப் புலமையைப் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு, 'பாரதி' என்று பட்டம் வழங்கினார். நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகவும், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த பாரதியார், 'மகாகவி' எனப் போற்றப்படுகிறார்.
மகாகவி பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை, "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டு, "இந்தியா" என்ற வார இதழையும், "பாலபாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். "கண்ணன் பாட்டு", "குயில் பாட்டு". "பாஞ்சாலி சபதம்" போன்ற காவியங்களைப் படைத்தார். கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
மகாகவி பாரதியார் பாடல்கள் மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டியதால் ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்ய முயன்றது. ஆனால், பாரதியார் ரயில் மூலம் தப்பி பிரெஞ்சு நாட்டு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி சென்று வாழ்ந்தார். பின்னர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவர் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.
பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும். தமிழ்ச் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவற்றைப் படிப்பவர் உள்ளத்தை ஈர்த்து வருவதைக் காண்கிறோம். மகாகவி பாரதியார் பிறந்த நாளான, டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications