தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்றும், 2025 ஜூலை 1 என முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
58 சதவீதமாக அதிகரிப்பு
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டுவதிலும், அத்திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் களப்பணியாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்.
அத்தகைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இவ்வரசு கருத்தில் கொண்டு, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், மு.க.ஸ்டாலின் 01.07.2025 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.
16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்
இதனால் தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications