கூட்டணி முறிவு..அதிமுக செய்த பெரிய தவறு! பாஜகவிலிருந்து எப்படி விலக முடியும்? நோட் பண்ணீங்களா?
சென்னை: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ள அதிமுக தனது அறிக்கையில் பாஜகவில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு உள்ளது நகைப்புக்கு உள்ளாகி வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து அண்மையில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்தால் இரு கட்சிகளிடையே மோதல் போக்கு அதிகரித்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று பாஜக உடனாக கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கும் வகையில் சென்னையில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் கடைசி பத்தியில் உள்ள, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்ற வாசகம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. காரணம் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருந்தது. அப்படி இருக்க பாஜகவிலிருந்து எப்படி அதிமுக விலக முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications