ஸ்டாலினுக்காக இந்தியாவே காத்திருக்கு.. தமிழ்நாட்டை பார்த்து பாடம் கற்க வேண்டும்.. தேஜஸ்வி யாதவ் பரபர
சென்னை : மக்களுக்கு எப்படி அரசியல் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.
தனது தந்தை லாலு பிரசாத் யாதவும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பிறந்தநாள் வாழ்த்துகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கச் சொன்னதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மிக முக்கியமான அரசியல் முன்னோட்டமாக, தேசிய அரசியல் தலைவர்களை அழைத்து, ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளது திமுக.

முக்கிய தலைவர்கள்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்பாவும் நிதிஷ் குமாரும்
இந்த விழாவில் பங்கேற்க வந்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமானம் தாமதம் காரணமாக பொதுக்கூட்ட மேடைக்கு தாமதமாக வருகை தந்தார். பின்னர் மேடையில் பேசிய தேஜஸ்வி யாதவ், "பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்று தான் பிறந்தநாள். எனது தந்தை லாலு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் தங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்க சொன்னார்கள்" எனத் தெரிவித்தார்.

மன்னிக்கணும்
மேலும் பேசிய தேஜஸ்வி யாதவ், "முதலில் நான் தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும். சமூக சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்திலிருந்து நாம் வந்துள்ளோம். திமுக அரசு பொருளாதார, வேலைவாய்ப்பை உருவாக்க முக்கியத்துவம் அளிப்பது போலவே பீகாரில் நாங்களும் முன்னெடுத்துச் செல்கிறோம். சோசலிசம் மற்றும் சமூக நீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாக தமிழ்நாடு மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளை தேசிய அளவில் எதிர்க்கட்சியாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்க்கிறது
பாஜக ஆட்சியில் நாட்டின் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வேலையின்மை, பண மதிப்பு வீழ்ச்சி என நம் நாடு பல்வேறு பிரச்சனைகளில் உள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி அமலில் உள்ளது. சமூகநீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பாடம் கற்க வேண்டும்
சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். மக்களுக்கு எப்படி அரசியல் கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பதை தமிழ்நாட்டில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளைத் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications