பைக் லைசென்ஸ் .. சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டிகளுக்கு சிக்கல்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் 3 சக்கர பேட்டரி வாகனம் விபத்தை ஏற்பத்திய வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், 'முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி வாகனங்களை இயக்குவது சட்டவிரோதம் என கூறியதுடன், விபத்தில் சிக்கிய சிறுமிக்கு 1.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது பற்றி விவரமாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக 3 சக்கர பேட்டரி வாகனங்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சொல்வது என்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பை அள்ள 3 சக்கர பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதாவவது சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் வீடு வீடாக குப்பைகளை எடுத்து செல்வதற்கு இந்த வாகனங்கள் தான் வருகின்றன. இதனிடையே இதுபோன்ற வாகனங்கள் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் இயக்கப்படும் 3 சக்கர பேட்டரி வாகனம் விபத்தை ஏற்பத்திய வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம், 'முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மூலம் 3 சக்கர பேட்டரி வாகனங்களை இயக்குவது சட்டவிரோதம்' என தீர்ப்பளித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி வாகனம் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்திருநகர் லட்சுமிநகர் பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 5 வயது சிறுமி மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 3 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி சிறுமியின் தந்தை சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி வாகனத்தை இயக்கியவர் இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்துள்ளார். இதனை வைத்துக்கொண்டு 3 சக்கர பேட்டரி வாகனத்தை ஓட்ட முடியாது.
இருசக்கர வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தவர் மூலம் 3 சக்கர பேட்டரி வாகனத்தை இயக்க செய்தது சட்டவிரோதம்.
விபத்தை ஏற்படுத்திய பேட்டரி வாகனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் இன்சூரன்ஸ் செய்திருந்த போதிலும் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர் மூலம் பேட்டரி வாகனத்தை இயக்கியதால் மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். விபத்தில் சிக்கிய சிறுமிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாயை இழப்பீடாக வழங்கி விட்டு அதனை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications