உடனே முடியுங்க.. உங்க ஆதார் கார்டு இருக்குல்ல.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் வேணுமா? தமிழக அரசு உத்தரவு
சென்னை: பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? இதுகுறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. என்ன தெரியுமா?
இன்றைய சூழலில், நம்முடைய நாட்டில், ஆதார் அட்டைகளை போலவே, ரேஷன் அட்டைகளை போலவே, பிறப்பு இறப்பு சான்றிதழ்களும், மிகவும் அவசியமானதாகிவிட்டது..

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச்சான்றிதழ் தேவையாக இருக்கிறது. இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. அதன்படி, குழந்தையின் பெயரை மட்டும், நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம்.
ஒரே ஆவணம்: நம்முடைய நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும், தற்போது, பிறப்பு சான்றிதழ், நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகியிருக்கிறது..
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம், திருத்தத்துடன் சமீபத்தில் அமலாக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறோமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
அதிரடி உத்தரவு: இந்நிலையில், தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று உத்தரவு வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து, மாநில பிறப்பு, இறப்பு பதிவாளரும், பொது சுகாதாரத்துறை இயக்குனருமான செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து, கடிதம் ஒன்றையும் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
"தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதில், பொதுமக்கள் பதிவேடு கட்டமைப்பு என்ற (CRS) சி.ஆர்.எஸ். முக்கிய பங்கு வகிக்கிறது.
பயனாளிகள்: எனவே, நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த, சி.ஆர்.எஸ்., அமைப்பின் கீழ் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணையும் சேர்ப்பது முக்கியம். அந்த சான்றிதழ்கள் தனிநபரின் அடையாள ஆவணமாக ஏற்று கொள்ள கூடியவை என, இந்திய பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பிறப்பு சான்றிதழ் கோரி பதியும்போது, தாய் அல்லது தந்தையின் ஆதார் எண்ணையும், இறப்பு சான்றிதழுக்கு உயிரிழந்தவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்ற வேண்டும். அவ்வாறு கடந்த மாதம் மேற்கொண்ட ஆதாருடன் இணைந்த பிறப்பு, இறப்பு பதிவின் விபரங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆதார் நம்பர்: தமிழகம் முழுதும், மாவட்டங்கள், நகராட்சிகள், ஊராட்சிகள், மருத்துவமனை வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. அதில் சென்னை உட்பட சில மாவட்டங்களில், மிக குறைந்த விகித ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதுடன், பதிவு நடவடிக்கைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications