எல்லாமே ரெடி.. தேதி குறித்த அண்ணாமலை.. வாட்ச் பில் + ஊழல் பட்டியல்! போன்லயே பார்க்கலாமாம்!
வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் உண்மையான சொத்து பட்டியல் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளார் அண்ணாமலை.
சென்னை : தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நகல் பென்டிரைவ் மூலம் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் பற்றியும் திமுகவினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதனையும் வெளியிடுவதாகக் கூறியுள்ளார் அண்ணாமலை.

பாஜக அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதற்கு செந்தில் பாலாஜியும் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். அண்ணாமலை போகிறபோக்கில் பொய் புகார் சொல்லாமல் ஆதாரத்துடன் குற்றம்சுமத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அண்ணாமலை வாட்ச்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வாட்ச் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு, திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். வாட்ச் பில்லை கேட்டால் அதை தராமல் மற்றதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை என தொடர்ந்து திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

சொத்து பட்டியல்
மேலும், சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும். ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தார். மேலும் 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன், அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

ஊழல் பட்டியல் இணையதளத்தில்
இந்நிலையில் பாஜக தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பதிவிடப்பட்டுள்ளது. போன், கம்ப்யூட்டர் என எதிலும் பார்க்கும்படி, அந்த ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை விளக்கும் வகையிலான படத்துடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது தமிழ்நாடு பாஜக. இதனால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேற மாதிரி ஆகிடும்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜகவை 420 கட்சி என்று விமர்சித்திருந்தார். அதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாஜகவை 420 கட்சி என்கிறார். நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். அது நன்றாக இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொன்னதுபோல ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் வரும்.

பென் டிரைவ் மூலம்
ஏப்ரல் 14 அன்று எனது வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ள திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். நீங்க ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. அவர்களது முதலீடு, பிசினஸ், மால், துபாயில் நிறுவனங்கள் அனைத்தும் அதில் தெரியவரும். எனவே இந்த சொத்து பட்டியல் முழுவதையும் இணையதளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவ் மூலம் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும். அதை பார்த்த பிறகு 420 யார் என்று தெரியும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications